சினிமா செய்திகள்

'டாக்ஸிக்' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.101.10 கோடி நிகர் வசூலை பெற்றுள்ளது.

உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்களால் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட 'ராக்ஸ்டார்' யஷ் நடிப்பில் பிரமாண்ட திரைப்படமான 'டாக்ஸிக்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்கள் பலர் கலவையான விமர்சனங்களை அளித்திருந்தாலும், பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளிலேயே வசூல் வேட்டையை தொடங்கியுள்ளது.

இந்தியாவில் மட்டும் முதல் நாளில் ரூ.101.10 கோடி நிகர் வசூலை பெற்று இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.

இருப்பினும் யஷ் நடிப்பின் முன்னதாக வெளியான மெகா ஹிட் திரைப்படமான 'KGF Chapter 2' படத்தின் முதல் நால் இந்திய வசூல் சாதனையான ரூ.116 கோடியை இந்த திரைப்படத்தில் முறியடிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் வசூல் விவரம்

'டாக்ஸிக்' திரைப்படம் உலகளவில் மொத்தம் ரூ.140.75 கோடி வசூலித்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது.

இதில் இந்தியாவில் மட்டும் 24,579 காட்சிகள் மூலம் ரூ.101.10 கோடி நிகர வசூலும், ரூ.120.75 கோடி மொத்த வசூலும் கிடைத்துள்ளதுடன், வெளிநாடுகளில் இருந்து ரூ.20.00 கோடி வசூலைப் பெற்றுள்ளது.

மாநில வாரியான வசூல் விவரம்

'டாக்ஸிக்' திரைப்படத்தின் மாநில வாரியான வசூலில் வட இந்திய திரையரங்குகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளன.

இதில் அதிகபட்சமாக இந்தி திரையுலகில் ரூ.55.00 கோடியும், கன்னடத்தில் ரூ.23.30 கோடியும், தெலுங்கில் ரூ.16.00 கோடியும், தமிழில் ரூ.5.50 கோடியும் மற்றும் மலையாள திரையுலகில் ரூ.1.30 கோடியும் வசூலாகியுள்ளது.

'KGF' பிரான்ச்சைஸ் வசூல் ஒப்பீடு

KGF திரைப்படம் 2018 ஆண்டு வெளியானபோது கன்னட திரையுலகைத் தாண்டி யஷ் பெரிய அளவில் அறியப்படவில்லை.

முதல் நாளில் அனைத்து மொழிகளையும் சேர்த்து இப்படம் ரூ.21.80 கோடி வசூலித்தது. ஆனால், 9 வாரங்களின் முடிவில் இந்தியாவில் மட்டும் ரூ.228 கோடி வசூலை வாரிக்குவித்தது.

ஆனால் இப்படத்தின் பட்ஜெட் ரூ.80 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் பாகத்தின் அசாத்திய வெற்றியால் உருவான எதிர்பார்ப்பில், 2022 ஆம் ஆண்டு வெளியான இரண்டாம் பாகம் முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.116 கோடி வசூலித்து மிரட்டியது.

ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ.1,215 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தியாவில் மட்டும் இதன் நிகர வசூல் ரூ.434.70 கோடியாகும். இப்படத்தின் பட்ஜெட் ரூ.100 கோடி ஆகும்.

'டாக்ஸிக்' திரைப்படம்

'Toxic: A Fairytale for Grown-Ups' இத்திரைப்படத்தை KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.

கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் நேரடியாக உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான்-இந்தியா படமாக வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் யஷ் உடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா மற்றும் ருக்மிணி வசந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.