முதல் வார வெளியீட்டிலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின் வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், படத்தின் உருவாக்க அனுபவங்கள், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் வெற்றிக்கான காரணங்கள் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் தென்பாதியான் பேசியதாவது:-
இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தக் கதையை முதலில் கேஜிஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன்.
பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜிஆர், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார்.
அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது.
இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். ஜிப்ரான் சார் அற்புதமான இசையைக் கொடுத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ‘இந்த ஹீரோவுக்கா?’ என்று முதலில் கேட்டார்.
ஆனால் கதையை முழுமையாகக் கேட்ட பிறகு மிகவும் பிடித்துப்போய், இந்தப் படத்தில் இணைந்தார். அவர் இணைந்த பிறகு, இந்தப் படம் இன்னும் பெரிய உயரத்தை அடைந்தது. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள்.
நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவு வேண்டும். நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.