சினிமா செய்திகள்

இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்கள்...

இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஜன நாயகன்:

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இப்படம் விஜயின் கடைசி படம் என கூறப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. ஜனவரி மாதம் 9-ந்தேதி வெளியாக இருந்த ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காதது, வழக்கு, தேர்தல், இணையத்தில் வெளியீடு என பல காரணங்களால் தற்போதுவரை படம் வெளியாகவில்லை.

இதையடுத்து விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளதை தொடர்ந்து படத்தில் அவரது பெயரில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் என சேர்ப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ‘ஜன நாயகன்’ எப்போது வெளியாகும் என்ற கேள்வி மேலோங்கி உள்ளது. இந்த நிலையில், விஜய் நடித்து ‘ஜன நாயகன்’ படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜெயிலர் 2:

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ' ஜெயிலர் 2'. நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் மற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. ‘ஜெயிலர் 2' படத்தில், ரஜினிகாந்த் 'டைகர்' முத்துவேல் பாண்டியன் என்ற தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார். அவருடன் அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஜெயிலர்2’ படம் ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்:

நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகி வரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath & Sons). வாத்தி, லக்கி பாஸ்கர் புகழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார். நாக வம்சி நிறுவனம் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

D55:

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'D55' படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். மேலும், பழம்பெரும் நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' மற்றும் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பில் உருவாகுகிறது.

D55 படத்தின் தயாரிப்புப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.