கோவாவில் நடைபெறவுள்ள 57-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் மதிப்புமிக்க 'இந்தியன் பனோரமா' பிரிவில் திரையிடுவதற்காக, தமிழ் சினிமாவின் ‘தாய் கிழவி’ திரைப்படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் SK Productions மற்றும் Passion Studios இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு கிடைத்துள்ள இந்தத் தேசிய அளவிலான அங்கீகாரம் தமிழ் திரையுலகை பெருமையடையச் செய்துள்ளது.
பிரபல மூத்த நடிகை ராதிகா சரத்குமார் 'பவுனுத்தாயி' என்ற முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த இத்திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
வயதான பெண்ணின் வாழ்வியல், குடும்ப உறவுகள், பெண்களின் சுயமரியாதை ஆகியவற்றை உணர்வுப்பூர்வமாகவும், நகைச்சுவை கலந்தும் விவரித்த இப்படம் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் 90 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் குவித்து, 2026-ம் ஆண்டின் மிக முக்கியமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றாக இது இடம்பிடித்தது.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் தனது முதல் படத்திலேயே அழுத்தமான கதைக் களம் மற்றும் யதார்த்தமான திரைக்கதை மூலம் அனைவரது பாராட்டுகளையும் பெற்றார். ராதிகா சரத்குமாரின் அசாத்திய நடிப்பும், இயக்குநரின் நேர்த்தியான உருவாக்கமும் இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றன.
தனது முதல் தயாரிப்பான ‘கனா’ (இயக்குநர் அருண்ராஜா காமராஜ்) திரைப்படத்திலிருந்தே, புதிய இயக்குநர்களுக்கும் தனித்துவமான கதைகளுக்கும் களம் அமைத்துக் கொடுப்பதை சிவகார்த்திகேயனின் SK Productions நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வரிசையில், 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' (கார்த்திக் வேணுகோபாலன்), 'வாழ்' (அருண் பிரபு புருஷோத்தமன்), 'டாக்டர்' (நெல்சன் திலீப்குமார்), 'டான்' (சிபி சக்கரவர்த்தி), 'குரங்கு பெடல்' (கமலக்கண்ணன்), சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த 'கொட்டுக்காளி' (பி.எஸ். வினோத்ராஜ்) மற்றும் 'ஹவுஸ் மேட்ஸ்' (ராஜவேல்) எனப் பல மாற்றுச் சினிமா முயற்சிகளையும், வணிக ரீதியிலான வெற்றிப் படங்களையும் இந்நிறுவனம் தொடர்ந்து தயாரித்து வருகிறது.
ஒரு திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 90 கோடிகளுக்கு மேல் வசூலிப்பதுடன், அதன் கலைத்தன்மைக்காகப் புகழ்பெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவிலும் அங்கீகரிக்கப்படுவது அபூர்வமான நிகழ்வாகும். இந்த இரட்டைச் சாதனையை 'தாய்க்கிழவி' நிகழ்த்தியுள்ளது.
இந்த கௌரவத்தைப் பெற்றதற்காக முதன்மைப் பாத்திரத்தில் நடித்த ராதிகா சரத்குமார், அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன், தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயன், சுதன் சுந்தரம் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.