தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசுகள் வழக்கம்போல் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டன.
இந்த வருடத்தின் சிறப்பம்சமாக, தமிழ்த் திரையுலகின் முன்னணி ஆளுமைகளுக்கும் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கும் சங்க நிர்வாகிகள் நேரடியாக நேரில் சென்று தீபாவளி வாழ்த்துகளையும் சிறப்பு பரிசினையும் வழங்கினர்.
சங்கத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான எஸ். ஏ சந்திரசேகர், முன்னாள் தலைவரும் பிரபல தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ். தாணு, உலகநாயகன் கமல்ஹாசன், தயாரிப்பாளர் மகேந்திரன், பெப்சி தொழிலாளர் சம்மேளனத் தலைவர் ஆர்.கே. செல்வமணி, பிரபல இசையமைப்பாளர் தீனா மற்றும் முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான பாண்டிராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து இந்த தீபாவளி சிறப்பு பரிசினை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும், சங்கத்தின் மற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த தீபாவளி பரிசுப் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்பட்டன.
இந்த தீபாவளி சிறப்புப் பரிசினை சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்குமரன் தலைமையில், துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னின்று, நேரடியாகச் சென்று வழங்கி தங்களது தீபாவளி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
ஒவ்வொரு வருடமும் உறுப்பினர்களின் நலனில் அக்கறை கொண்டு வழங்கப்படும் இந்த தீபாவளி சிறப்பு பரிசு, இந்த வருடமும் எவ்வித தொய்வும் இன்றி சங்க நிர்வாகிகளால் பாரம்பரியமிக்க முறையில் வழங்கப்பட்டதற்கு சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.