பிரபல சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணன் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதில், உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் பேசியிருந்தார்.
இவரின் இந்த கருத்துக்கு பலரும் எதிர்ப்புகளும் ஆதரவுகளும் தெரிவித்து வந்தனர். இதையடுத்து பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த புகாரில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனை பாண்டிச்சேரியில் வைத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கனல் கண்ணன் ஜாமின்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் சண்டை பயிற்சி கலைஞர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கனல் கண்ணன் 4 வாரத்திற்கு விசாரனை அதிகாரி முன்பு காலை, மாலையில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை வழங்கி, இனி இதுபோன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.