மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படம் தென்னிந்திய சினிமாவில் முதல்முறையாக 4DX தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர்கள் தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் -2' படத்தின் அறிமுக காட்சிக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
கடந்த ஆண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் பாகத்திற்கும் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.