பிரபல நடிகர் சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.
1973 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. அதன்பின்னர், தமிழில் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் அறிமுகமானார். 70,80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த அவர், நடிகர் கமல், மற்றும் ரஜினி, சிவாஜி, சிரஞ்சீவி ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்தது. நடிகர் சரத்பாபு மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சரத்பாபுவிற்கு இரங்கல் தெரிவித்து கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'பிரபல தென்னிந்திய நடிகர் சரத் பாபுவின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அமிர்தவர்ஷினி படத்தில் அவருடைய நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களின் வலியில் நானும் பங்கு கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.