சினிமா செய்திகள்

தந்தைக்கு கௌரவ டாக்டர் பட்டம்- முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சூர்யா

ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா.எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிவகுமார், ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான மதிப்புறு முனைவர் பட்டங்களை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு சிவகுமாரின் 2-வது மகன் கார்த்தி, முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ள நிலையில் அவரின் மூத்த மகனும் நடிகருமான சூர்யாவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு புள்ளியில் தொடங்கும் கோடு எவ்வளவு நுட்பமாக ஓவியமாக மாறுகிறதோ...அதைப் போலவே தன் வாழ்வையும் நெறியும் நேர்த்தியுமாய் வகுத்துக் கொண்டவர். ஒரு கிராமத்திலிருந்து கிளம்பி வந்து, கலையுலகின் கவனம் திருப்பி, எல்லோருக்குமான முன்னுதாரணமாக மாறிய அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் என்பது மிகப் பொருத்தமானது. எள்ளளவும் நெறிபிறழாத அவர் வாழ்க்கைக்கும் திறமைக்கும் வாய்த்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்.

சிறுவனாக இருந்த காலம்தொட்டு இன்று வரை அப்பாவின் ஆச்சர்ய உயரங்களைக் கண்டு வியக்கும் நான், அவரது உறுதி, உழைப்பு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையே எனக்கான பாடமாகக் கொள்கிறேன். அவரது சாதனைகளைவிட அவரது வாழ்வியல் விழுமியங்களே (Life Values) என் வாழ்க்கையையும் எண்ணங்களையும் செதுக்கி இருக்கின்றன. 'சிவகுமார் அவர்களின் மகன்' என்பதே என்றைக்கும் எனக்கான அடையாளம்; என் வாழ்நாளுக்கான அங்கீகாரம்.

எங்கள் தந்தையின் 60 ஆண்டுகாலப் பயணம் தமிழ்ச் சமூகத்திற்குப் பயன்பட்டிருப்பதன் அங்கீகாரமாகவே இந்த முனைவர் பட்டத்தைக் கருதுகிறோம். இந்தத் தருணத்தில் மதிப்பிற்குரிய ஓவியர் திரு சந்துரு (எ) குருசாமி சந்திரசேகரன் அவர்களுக்கும் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் எங்களுக்குக் கூடுதல் மகிழ்வைத் தருகிறது.

இருவருக்கும் மகத்தான கௌரவத்தை வழங்கிய தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழகத்திற்கும், இச்சிறப்பை முன்னின்று வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பிலும், எல்லோர் சார்பிலும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என சூர்யா கூறினார்.

Our heartfelt thanks to the Hon'ble Chief Minister of Tamilnadu @mkstalin & Dr.J.Jayalalitha Music and Fine Arts University for conferring the Honorary Doctorate to my father #Sivakumar for his lifelong contribution to art, cinema & social welfare. ?? pic.twitter.com/8Xqi7w4DSB