மலையாளத் திரையுலகில் 'ரோமாஞ்சம்', 'ஆவேசம்' போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்களை இயக்கிய ஜித்து மாதவனுடன் இணைய வேண்டும் என்று தான் ரகசியமாக ஆசைப்பட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற 'சீன்' திரைப்படத்தின் முன்கூட்டிய வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைப் பகிர்ந்துகொண்டார். சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இத்திரைப்படம், வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ஜித்து மாதவனுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சூர்யா பேசியதாவது, 'ஜித்து மாதவனின் படங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரோடு பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரம் அது நடக்கும் என்று நான் கற்பனை கூட செய்யவில்லை.
பொதுவாக கதைகளைக் கேட்கும்போது நான் அமைதியாக கவனிப்பேன். ஆனால், ஜித்து எனக்குக் கதை சொல்லத் தொடங்கிய 5 நிமிடங்களிலேயே, என்னையும் அறியாமல் நான் சத்தமாக சிரிக்கத் தொடங்கிவிட்டேன். அந்தளவுக்கு கதையை ரசித்து ரசித்துக் கேட்டேன்' என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
நஸ்ரியா குறித்து பேசுகையில், 'ஜித்து எப்போதும் தனது தனித்துவமான பாணியில் ஒரு புதிய உலகத்தையே உருவாக்குவார். இந்தப் படத்திலும் அதைச் செய்துள்ளார். நஸ்ரியா தனது இயல்பான நடிப்பால் படத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவர் நடித்துள்ள 'மாயா' கதாபாத்திரம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் மிகச் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்' என சூர்யா பாராட்டினார்.
நஸ்லன் குறித்து பேசுகையில், 'தமிழ் சினிமாவிற்கு நஸ்லனை அன்போடு வரவேற்கிறேன். உங்களின் முந்தைய படங்களை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் இன்னும் பல தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும். இந்தத் திரைப்படத்தில் நீங்கள் நிகழ்த்திய மேஜிக்கிற்கு நன்றி' என்று வாழ்த்தினார்.
'சீன்' திரைப்படம் மூலம் ஜித்து மாதவன் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகிறார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 'ழகரம் ஸ்டுடியோஸ்' மற்றும் '2D எண்டர்டெய்ன்மென்ட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் நஸ்ரியா மற்றும் நஸ்லன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் மூலம் இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அதுமட்டுமின்றி, ஒளிப்பதிவாளர், நடன இயக்குநர், படத்தொகுப்பாளர் மற்றும் இசைக் குழுவினர் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இதுவே முதல் தமிழ்ப் படமாகும்.
இத்தனை புதிய திறமையாளர்களைத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாக சூர்யா தனது உரையில் நெகிழ்ந்து குறிப்பிட்டார்.