'ஜனநாயகன்' திரைப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் ஒரு புதிய திரைப்படத்திற்காக கைகோர்க்க உள்ளதாகத் திரையுலகில் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹெச்.வினோத் ஏற்கனவே ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கியிருந்தார்.
அந்தச் சமயத்திலேயே அந்த தயாரிப்பு நிறுவனத்துடன் மேலும் படங்கள் பண்ண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், தற்போது சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹெச்.வினோத் இயக்கவிருப்பதாகத் தெரிகிறது.
நடிகர் சூர்யா தற்போது தொடர் வெற்றிகளுடன் படு பிஸியாக வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான இவருடைய 'கருப்பு' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.250 கோடிக்கும் மேல் வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் #Suriya47 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதைத் தொடர்ந்து ஹெச்.வினோத் படத்திற்கான இறுதிக்கட்ட கதை விவாதங்கள் மற்றும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள அரசியல் திரைப்படமான 'ஜனநாயகன்' ரிலீஸான பிறகு, சூர்யா உடனான இந்த புதிய கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமூகப் பொறுப்புள்ள அரசியல் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைகளைக் களம் காணும் ஹெச்.வினோத், சூர்யாவுடன் இணைவது ரசிகர்களிடையே இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.