2006ல் திருமணம் செய்துகொண்ட சூர்யா–ஜோதிகா, 20 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி ஸ்காட்லாந்தின் பனிமூட்டமான மலைகள், ஏரிகள் தங்கள் காதலை பிரதிபலிப்பதாக உணர்ந்து அங்கு மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்தனர். குழந்தைகள் தோழன், தோழியாக இணைந்த இந்த விழாவில், வாழ்க்கையின் நேர்மறை பக்கம், தியாகம், அன்பை கொண்டாடியதாகவும், ஸ்காட்லாந்து மக்களின் பரந்த மனம் தங்களை ஆழமாக தொட்டதாகவும் நன்றியுடன் பதிவு செய்துள்ளனர்.
தமிழ் திரை உலகில் நட்சத்திர ஜோடியான சூர்யா, ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தங்களது 20-வது திருமண நாளை கடந்த 11-ந்தேதி வித்தியாசமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருமணமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மகன், மகள் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். மணமகனுக்கு தோழனாக கார்த்தியும், ஜோதிகாவுக்கு தோழியாக தியாவும் இருந்தனர். பின்னர் இருவருக்கும் தோழனும், தோழியுமாக மகள் தியாவும், மகன் தேவ்வும் மாறி மாறி இருந்தனர்.
திருமண கொண்டாட்ட நிகழ்ச்சிகளை சூர்யாவும், ஜோதிகாவும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தி சீக்குவல் என்று தலைப்பிட்டு பகிர்ந்தனர். தொடர்ந்து ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில், எங்களது 20 ஆண்டு கால அன்பையும், சண்டைகளையும் கொண்டாடும் வகையில் மீண்டும் ஒரு முறை எடுத்துக் கொண்ட திருமண உறுதிமொழி. இது திருமண வாழ்க்கையின் கொண்டாட்டம் அல்ல. இது குறைபாடுகளையும் விட்டு கொடுத்தல்களையும், புரிந்துணர்வையும், தியாகங்களையும், சுயநலமற்ற அன்பையும் கொண்டாடும் விழா. ஒருவருக்கொருவர் நாம் எப்படி மாறி இருக்கிறோம் என்பதற்கான கொண்டாட்டம். உண்மைக்கு மிகத் தொலைவில் இருப்பது போல் தோன்றிய ஒரு கனவு இன்று என் வாழ்நாள் முழுமைக்கும் நான் கனவு காணும் ஒரு நிஜமாக மாறி உள்ளது.
இப்போது இந்த விஷயங்களை நான் உறுதிமொழியாக எடுத்துக் கொள்கிறேன். நான் எப்போதும் மகிழ்ச்சியான நபராக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையின் நேர்மறையான பக்கத்தை மட்டுமே பார்க்க நான் விரும்புகிறேன். தன்னைவிட அதிகமாக மதிக்கும் ஒரு ஆண் துணை கிடைக்கும் போது இந்த வாழ்க்கையே ஒரு வரமாகிறது. ஒவ்வொரு காலையிலும் என்னை பாதுகாக்கும் ஒரு ஆணின் அரவணைப்பில் நான் கண் விழிக்கிறேன். என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தையும், காரணத்தையும் கொடுத்த என் அழகிய குழந்தைகளுக்காக நன்றியோடு இருக்கிறேன்.
என் சூர்யா உங்களுக்காக எப்போதும் மனைவியாகவே இருக்க உறுதியளிக்கிறேன். எங்களது அடுத்த 20 ஆண்டுகளுக்கான தொடக்கம் இது என பதிவிட்டு இருந்தார்.
மீண்டும் திருமணம் செய்து கொண்ட சூர்யா- ஜோதிகா தம்பதிக்கு ரசிகர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சூர்யா- ஜோதிகா தம்பதிகளின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்த நிலையில், திருமணத்தை நடத்திக்கொண்டுத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சூர்யா- ஜோதிகா இணைந்து அவர்களின் திருமண வாழ்க்கை பற்றி பேசுவது திருமண நிகழ்வின் பின்னணியில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், பனிமூட்டமான மலைப்பகுதிகளும் ஏரிகளும் காதல் கொள்ளும் ஸ்காட்லாந்து, எங்களின் காதலையும் பிரதிபலிக்கும் விதமாக இருந்ததால் நாங்கள் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் வீடு திரும்புகையில் நினைவுகளை விட மேலான ஒன்றை நாங்கள் சுமந்து சென்றோம். பரந்த மனதுள்ள, உண்மையான அன்பைக் காட்டும் மனிதர்களை சந்தித்ததால் எங்கள் இதயங்கள் ஸ்காட்லாந்து விட்டு எப்போதும் பிரியாது என குறிப்பிட்டு அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.