சினிமா செய்திகள்

"நாட்டில் நடப்பது அவசரநிலை"-மாணவர்கள் போராட்டத்திற்கு கொச்சியில் திரண்டு ஆதரவு அளித்த மலையாளத் திரையுலகினர்!

நாட்டில் நடப்பது அவசரநிலை"-மாணவர்கள் போராட்டத்திற்கு கொச்சியில் திரண்டு ஆதரவு அளித்த மலையாளத் திரையுலகினர்!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜாந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக, மலையாளத் திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொச்சியில் திரண்டு தங்களது பலத்த ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கொச்சி மகாராஜாஸ் கல்லூரியில் மாணவர்கள் யூனியன் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆதரவுப் போராட்டத்தில், பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ், இயக்குநர் ஆஷிக் அபு, மஹேஷ் நாராயணன் மற்றும் எழுத்தாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

போராட்டக் களத்தில் பேசிய நடிகர் ஜோஜு ஜார்ஜ், நாட்டில் நிலவும் தற்போதைய சூழலை 'அவசரநிலை' என கடுமையாக விமர்சித்தார். "ஒரு நாட்டின் கல்வி அமைப்பில் வினாத்தாள் கசிவது அல்லது சீர்கேடு ஏற்படுவது என்பது அந்த நாட்டிற்கு அளிக்கப்படும் 'மெதுவான விஷத்திற்கு சமம்."

அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்:

நியாயத்திற்காகக் குரல் கொடுக்கும் மாணவர்களைத் தடிகளால் அடித்து நொறுக்குவதும், எதிர்க் கட்சித் தலைவர்களைச் சட்டையை பிடித்து இழுத்துச் செல்வதும் ஒரு கொடூரமான ஜனநாயக விரோத நடவடிக்கை. நாட்டில் இப்போது நடப்பது அப்பட்டமான அவசரநிலைதான்.

மாணவர்களுக்குப் பாராட்டு:

எந்தவிதப் பயமும் இன்றி, நாட்டின் எதிர்காலத்திற்காகக் களத்தில் நின்று போராடும் இந்த இளைஞர்களுக்கே நமது முதல் பாராட்டு சேர வேண்டும்" என்று அவர் உருக்கமாகப் பேசினார்.

இளைஞர்களே இந்தியாவின் நம்பிக்கை:

இயக்குநர் 'ஆஷிக் அபு' பேசுகையில், "டெல்லி வீதிகளில் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான நம்பிக்கை. அரசியலற்றவர்கள் என்று விமர்சிக்கப்படும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் (Gen Z), நாட்டின் சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளில் தங்களுக்கு இருக்கும் அக்கறையை நிரூபித்துள்ளனர் என்று கூறினார்.

போராட்டத்தில் பங்கேற்ற முக்கியப் பிரபலங்கள்:

இந்தச் சங்கமத்தில் எழுத்தாளர்கள் என்.எஸ். மாதவன், கே.ஆர். மீரா, நடிகை கௌரி கிஷன், நடிகை ரஞ்சினி ஹரிதாஸ், ராப் பாடகர் பேபி ஜீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கைகளில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்களுக்குத் தங்களின் ஆதரவைப் பதிவு செய்தனர்.

தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திங்கள் அடுத்தடுத்து மாணவர் போராட்டத்திற்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருவது தேசிய அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.