தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் சூர்யாவின் சமீபத்திய அடுத்தடுத்த தொடர் வெற்றிகளை "டபுள் தமாகா" எனப் பாராட்டியுள்ளார். மேலும் சூர்யாவுடன் எப்போது படம் இயக்குவீர்கள் என்ற ரசிகர்களின் நீண்ட நாள் கேள்விக்கு அவர் சுவாரசியமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.
இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில், பிரபல நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகி வரும் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியும், நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு கட்டத்தில், மேடையில் இருந்த ராஜமௌலியிடம் "நடிகர் சூர்யாவுடன் நீங்கள் எப்போது இணைந்து பணியாற்றப் போகிறீர்கள்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ராஜமௌலி. 'இந்தக் கேள்வி கண்டிப்பாக வரும் என்று எனக்குத் தெரியும். அதற்கான பதிலோடுதான் நான் வந்திருக்கிறேன். முதலில், நாம் இங்கு 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்' திரைப்படத்தை விளம்பரப்படுத்த வந்திருக்கிறோம். இப்போது நானும் சூர்யாவும் இணையும் படம் பற்றி நான் பேசினால், அதுதான் நாளைய தலைப்புச் செய்தியாக மாறும். இந்தத் திரைப்படம் ஓரங்கட்டப்பட்டுவிடும்.
அதனால் அதை நான் விரும்பவில்லை. ஆனால், நாங்கள் இருவரும் எப்போது இணைந்து படம் செய்தாலும், அது நிச்சயம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும்' என்று சாதுரியமாகப் பதிலளித்தார்.
அதைத் தொடர்ந்து மேடையில் பேசிய ராஜமௌலி, சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியைப் பெற்ற 'கருப்பு' மற்றும் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய திரைப்படங்களுக்காக சூர்யாவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தத் தொடர் வெற்றிகளை "டபுள் தமாகா" என்று அவர் வர்ணித்தார்.
'ஆவேசம்' பட புகழ் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சீன்' (Scene) திரைப்படத்திற்கும் ராஜமௌலி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். நஸ்லென் மற்றும் நஸ்ரியா நடிப்பில், வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் விளம்பரப் பொருட்கள் சமீபத்தில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
"ஏற்கனவே சூர்யா 'சிங்கம்' திரைப்பட வரிசைகள் மூலம் மாஸ் மசாலா போலீஸ் கதைகளில் தனது அசாத்திய திறமையை நிரூபித்துள்ளார். ஆனால், இந்த 'சீன்' திரைப்படத்தில் ஜித்து மாதவனின் தனித்துவமான பாணியில், சூர்யா முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.
இதில் அவர் மிகவும் 'அல்ட்ரா மாடர்ன்' போன்று காட்சி அளிக்கிறார். இதைப் பார்க்கவே சூப்பராக இருக்கிறது. நவம்பர் ரிலீஸுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்" என்று கூறினார்.
ஒரே மேடையில் ராஜமௌலி மற்றும் சூர்யா கலந்துகொண்ட இந்த நிகழ்வும், சூர்யாவின் படங்களைப் பற்றி ராஜமௌலி பெருமிதமாகப் பேசியதும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.