சினிமா செய்திகள்

சென்னையில் புது வீடு வாங்கினார் ஸ்ருதி ஹாசன்.. வைரலாகும் கிரகப்பிரவேசப் புகைப்படங்கள்!

புதிய வீட்டிற்கான கிரகப்பிரவேசம் ஆடம்பரமின்றி, எளிமையான முறையில் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாகவும், பிரபல இசைக்கலைஞராகவும் வலம் வரும் ஸ்ருதி ஹாசன், தனது சொந்த ஊரான சென்னையில் புதிய பிரம்மாண்ட இல்லம் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த புதிய வீட்டிற்கான கிரகப்பிரவேச பூஜை கடந்த திங்களன்று நடைபெற்றது.

எளிமையான முறையில் நடந்த பூஜை..

புதிய வீடு வாங்கியதை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட இந்த கிரகப்பிரவேச விழா மிகவும் ஆடம்பரமின்றி, எளிமையான முறையில் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பூஜையின் போது ஸ்ருதி ஹாசன் பாரம்பரிய உடையில் எளிமையாகவும் இருந்தார்.

நண்பர்களின் இன்ஸ்டாகிராம் வாழ்த்தும், ஸ்ருதியின் ரீபோஸ்ட்டும்..

இந்த கிரகப்பிரவேச பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

முக்கியமாக, இந்த விழாவில் கலந்து கொண்ட அவரது நெருங்கிய தோழி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "புதிய வாழ்க்கைப் பயணத்திற்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டு நெகிழ்ச்சியான பதிவுகளைப் பகிர்ந்திருந்தார். தோழியின் இந்த அன்பான வாழ்த்துப் பதிவுகளை நடிகை ஸ்ருதி ஹாசனும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறுபதிவு செய்து, அவர்களுக்குத் தனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படங்களைப் பார்த்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் ஸ்ருதி ஹாசனுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சொந்த உழைப்பின் அடையாளம்..

உலகநாயகன் கமல்ஹாசனின் மகளாக ஸ்ருதி ஹாசன் இருந்தாலும், தனது கடின உழைப்பால் சினிமா மற்றும் இசைப் பயணத்தின் மூலம் ஈட்டிய சொந்த வருமானத்தில் இந்த வீட்டை வாங்கியுள்ளார்.

மும்பையில் ஏற்கனவே அவர் வசித்து வந்த வீடு தனித்துவமான கோதிக் ஸ்டைல் அலங்காரங்களுக்குப் பெயர் பெற்றது. தற்போது சென்னையில் வாங்கியுள்ள இந்த புதிய வீடு, அவரது சொந்த ஊருடன் அவரை மீண்டும் இணைத்துள்ளது.

எழும் கேள்விகள் மற்றும் விவாதங்கள்..

இந்த முக்கியமான தனிப்பட்ட மைல்கல் நிகழ்வில் ஸ்ருதி ஹாசனின் தந்தை கமல்ஹாசன் மற்றும் அவரது தங்கை அக்‌ஷரா ஹாசன் கலந்து கொள்ளாததால் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

அவர்கள் ஏன் இதில் பங்கேற்கவில்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இது சமூக வலைத்தளங்களில் தற்போதைய விவாதமாக மாறியுள்ளது.

SCROLL FOR NEXT