தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் விஜயுடன் தான் சேர்ந்துவாழ விரும்பவில்லை. எனவே தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டாக நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும், அதனை கண்டித்த பிறகும் மீண்டும் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்து வருகிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கிடையே, திருவான்மியூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயும், நடிகை திரிஷாவும் ஒரே மாதிரி உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்றது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது.
அந்த சமயத்தில் இயக்குநரும் நடிகருமான சமுத்திரக்கனி பேசிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், "இதெல்லாம் விளையாட்டா? யாரை பழிவாங்க இதை செய்கிறார்? ஒரு பிரச்னை நடக்கும்போது நடிகையை கூட்டி வருகிறார். நான்கு சுவருக்குள் இதையெல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும். சொந்தக் கட்சிக்காரர்களே இதற்கு மேல் முட்டுக்கொடுக்க முடியாது என்று புலம்புகிறார்கள்" என்று சமுத்திரக்கனி பேசியிருந்தார். விஜயை குறிப்பிட்டு தான் சமுத்திரக்கனி பேசியுள்ளார் என்று இணையத்தில் இந்த வீடியோ வைரலானது.
இந்நிலையில், அந்த வீடியோ குறித்து சமுத்திரக்கனி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "வீடியோ எடுக்கிறார்கள் என எனக்கு முன்பே தெரியும். முன்னுரையை அந்த தம்பி எடுக்கவில்லை, முடிவுரையை மட்டும் தான் எடுத்தான், சரி எடுக்கட்டும் என விட்டுவிட்டேன்; எனக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேச தெரியாது.
சந்தோஷமோ, வலியோ, வேதனையோ அதை அப்படியே பிரதிபலித்துவிட்டு நான் அடுத்த தளங்களுக்கு சென்றுவிடுவேன். அது வந்துவிட்டது, அதற்கு மேலே மானே தேனே எல்லாம் சேர்த்து தம்பிகள் வேலையை பார்த்துவிட்டார்கள். அதனை நான் ஒரு குற்றமாக எல்லாம் நினைக்கவில்லை; பேசிவிட்டு பின் வருத்தமாகவும் நினைக்கவில்லை. என் மனதிற்கு பட்டதை பேசினேன்" என்று தெரிவித்தார்.