டாம் ஹாலண்ட் (Tom Holland) நடிப்பில் வெளியாகியுள்ள புதிய மார்வெல் சூப்பர்ஹீரோ திரைப்படமான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே', இந்திய பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. திரையரங்குகளில் வெளியான இரண்டே நாட்களில் இந்தியாவில் ரூ.100 கோடி வசூல் என்ற இமாலய இலக்கைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஜூலை 30 அன்று வெளியான இத்திரைப்படம், முதல் நாளிலேயே ரூ.73.96 கோடி மொத்த வசூல் ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் திரைப்படங்களிலேயே மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை இத்திரைப்படம் பெற்றுள்ளது.
இதற்கு முன் 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' மற்றும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' ஆகிய படங்கள் வைத்திருந்த முதல் நாள் வசூல் சாதனைகளை இது முறியடித்துள்ளது. ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 90%-க்கும் அதிகமான இருக்கை நிரப்பல் பதிவாகிய நிலையில், தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பிடத்தக்க வசூலை அள்ளியுள்ளது.
2021-இல் வெளியான ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படத்தில், பீட்டர் பார்க்கரின்நினைவுகள் உலக மக்கள் அனைவரின் மனதிலிருந்தும் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. தன் காதலி எம்.ஜே (ஜெண்டயா), நண்பன் நெட் (ஜேக்கப் படலான்) என அனைவரும் தன்னை மறந்த நிலையில், தனிமையில் வாழும் பீட்டர் பார்க்கர், புதிய வில்லன்களையும் சவால்களையும் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இதன் கதைக்களம்.
டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட், ஜெண்டயா ஆகியோருடன் சேடி சிங்க், ஜான் பெர்ந்தல் , மார்க் ரஃப்பாலோ எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். வார இறுதி நாட்களான நேற்றும் இன்றும் கணக்கிட்டால் முதல் நான்கு நாட்களிலேயே இந்தியாவில் ரூ.200 கோடி வசூல் மைல்கல்லை இத்திரைப்படம் சுலபமாகக் கடந்துவிடும் என்று பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.