தமிழ் சினிமாவின் நடிப்பு அரக்கனாக அறியப்படும் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகை மமிதா பைஜுவை 'நடிப்பு அரக்கி' என பாராட்டியுள்ளார். இயல்பான நடிப்பு மற்றும் குறும்புத்தனமான முகபாவனைகளால் இளம் ரசிகர்களை கவர்ந்த மமிதா பைஜுவின் திறமையை அவர் புகழ்ந்தது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவை நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களும் திரையுலகினரும் வர்ணிப்பதுண்டு. வில்லத்தனம், வித்தியாசமான உடல்மொழி, மிரட்டலான வசன உச்சரிப்பு என நடிப்பில் ஒவ்வொரு படத்திலும் புதிய பரிமாணங்களைக் காட்டி வருகிறார். இப்படி நடிப்பால் மிரட்டும் எஸ்.ஜே. சூர்யாவே, நடிகை மமிதா பைஜுவை நடிப்பு அரக்கி என்று பாராட்டியிருப்பதுதான் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலையாளத் திரையுலகில் இருந்து வந்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருப்பவர் நடிகை மமிதா பைஜு. இயல்பான நடிப்பு, குறும்புத்தனமான முகபாவனைகள், துடிப்பான நடிப்பு என இளம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். குறிப்பாக, இளம் தலைமுறையினரைக் கவரும் கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், பேட்டி ஒன்றில் எஸ்.ஜே. சூர்யாவிடம் சுவாரசியமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. குறும்புத்தனமாக நடிப்பவர் என்ற பட்டத்துக்கு நீங்கள் தகுதியானவர் என்றால், குறும்புத்தனமாக நடிக்கும் நடிகை என்று யாரைக் குறிப்பிடுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த எஸ்.ஜே. சூர்யா, “மமிதா பைஜூதான். அவர் சமீபகாலமாக மிகச்சிறப்பாக நடித்து வருகிறார். அவர் ஒரு நடிப்பு அரக்கி. வட இந்தியத் திரையுலகைப் பொறுத்தவரை நடிகை ஆலியா பட் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்” என்று கூறினார்.
பொதுவாக, எஸ்.ஜே. சூர்யா என்றாலே அவரது அதிரடியான நடிப்புதான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு நடிகரே மமிதா பைஜு வின் நடிப்பைப் பாராட்டியிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே போல், பாலிவுட்டில் ஆலியா பட்டின் நடிப்பையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.