தமிழ் திரையுலகின் மூத்த கலைஞர் சிவகுமார். நடிப்பில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், ஓவியம் மற்றும் கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் கொண்டவர். திரைத்துறை மற்றும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொள்ளும் சிவகுமார், மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினரை ஊக்கப்படுத்தும் வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் சிவகுமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் பற்றி பேசியுள்ளார். மேலும், தான் முதலமைச்சர் ஆக நினைத்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து பேசியதாவது..,
"நடிகர்கள் நாட்டை ஆள முடியும் என்பதை எம்.ஜி.ஆர். நிரூபித்து காட்டினார். அவரை போன்ற நடிகர் இனி பிறக்க வாய்ப்பில்லை. ரொனால்டு ரீகனுக்கு முன்பே நாட்டை ஆண்டவர் எம்.ஜி.ஆர்., ஆனால் எம்.ஜி.ஆருக்கு வாரிசுகளே இல்லை. அவருக்கு மூன்று மனைவிகள் இருந்தும் குழந்தைகள் கிடையாது. உலகிலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன். அவரை போல் ஒருத்தர் மீண்டும் பிறக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு பெரிய நடிகர் அரசியலில் தோற்றுத் தான் போனார்.
என்ன சொல்ல வருகின்றேன் என்றால், எல்லாம் பெற்றவன் யாரும் இல்லை. நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். கடவுள் கொடுப்பதை வைத்து சந்தோஷமாக இருங்கள். இன்னொருத்தருடன் ஒப்பிடாதீர்கள். நான் காமராஜர் காலத்திலேயே முதலமைச்சராக நினைத்தேன், அந்த வாய்ப்பு தவறிவிட்டது," என்றார்.