ரசிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் சிவகார்த்திகேயன் 
சினிமா செய்திகள்

அரசியல் மாநாடு போல் நடந்த ரசிகர்கள் சந்திப்பு கூட்டம்: விமர்சனங்களை பற்றி கவலை வேண்டாம்- சிவகார்த்திகேயன்

வாழ்க்கையில் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நன்றாக படித்து நல்ல முறையில் சம்பாதித்து குடும்பத்துடன் பொறுப்போடு வாழ வேண்டும்.

சிவகார்த்திகேயன் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு பிரமாண்டமாக நடைபெற்றது. 2000 ரசிகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அரசியலுக்கு வருவதற்கான சூழல் இல்லை எனவும், நற்பணி இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

சமீபகாலமாக திரை உலக பிரபலங்கள், ரசிகர்கள் சந்திப்பை பிரமாண்டமாக நடத்தி வருகின்றனர். சூர்யா, தனுஷ் ஆகியோர் ரசிகர்கள் சந்திப்பை நடத்தினர். விஜய் சேதுபதியும் தனது ரசிகர்களை ஒருங்கிணைத்து மன்றத்தை பலமாக்க புதிய நிர்வாகிகளை நியமித்தார்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் போரூர் அருகே நற்பணி இயக்க ரசிகர்கள் சந்திப்பை நடத்தினார். சுமார் 2000 ரசிகர்கள் வெள்ளை சீருடை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய சிவகார்த்திகேயன் பேசும் போது, வாழ்க்கையில் குடும்பத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். நன்றாக படித்து நல்ல முறையில் சம்பாதித்து குடும்பத்துடன் பொறுப்போடு வாழ வேண்டும்.

தினமும் 15 நிமிடங்களாவது புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை உருவாக்கி கொள்ளுங்கள். புத்தகம் படிப்பதன் மூலம் சிந்தனை திறன் மேம்படும். சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதை குறைத்து புத்தக வாசிப்புக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள். நம்மை விமர்சிப்பவர்கள் விமர்சித்து கொண்டிருப்பார்கள். விமர்சனங்களை பற்றி கவலைப்படாமல் உங்களுடைய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சி நடந்த மண்டப வளாகம் முழுவதும் பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில் அனுமதி சீட்டு வைத்திருப்போர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அரசியல் மாநாடு போல் நடந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சந்திப்பு தற்போது பேசும் பொருளாகி உள்ளது.

நிகழ்ச்சி குறித்து ரசிகர் ஒருவர் கூறுகையில், ‘நாள்தோறும் நற்பணி செய்ய வேண்டும்’ என சிவகார்த்திகேயன் கூறினார். எங்களால் முடிந்த அளவுக்கு இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகிறோம். சிவகார்த்திகேயன் கட்சி தொடங்குவதற்கான சூழல் இப்போதைக்கு இல்லை. ரசிகர்களாகிய நாங்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் விரும்பவில்லை. எதிர்காலத்தில் அப்படிப்பட்ட சூழல் அமைந்தால் அவர் என்ன கொள்கைகளையும் நோக்கங்களையும் முன் வைக்கிறார் என்பதை பொறுத்து நாங்கள் ஆதரவு அளிப்போம். நற்பணி இயக்கத்தை எதிர்காலத்தில் எப்படி வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT