சினிமா செய்திகள்

வீட்டில் நான் கப் சிப்: பாலிவுட் நடிகர் ஷாருக்கான்

என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக இருந்தது சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான்.

பாலிவுட் நடிகரான ஷாருக்கான், நிஜ வாழ்க்கையில் மனைவி கவுரிகானிடம் மட்டும் அடக்கி வாசிக்கிறேன் எனக்கூறி ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.

இந்திய அளவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர் ஷாருக்கான். நடிப்பில் மட்டுமின்றி, தனது தனித்துவமான நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர்.

சமீபத்தில் துபாயில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற ஷாருக்கான் தனது குடும்ப வாழ்க்கை குறித்துப் பேசியதாவது:

எங்கள் வீட்டில் எனக்கு எதையும் செய்ய அனுமதி கிடையாது. மனைவிக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேச முடியாது.

வீட்டில் பயன்படுத்தப்படும் வண்ணங்கள், படுக்கையில் அமர்ந்து சாப்பிடுவது என எதைப் பற்றியும் புகார் சொல்ல முடியாது.

வீட்டில் உள்ள ஓவியங்கள், மொட்டை மாடி, கூரை, படிக்கட்டுகள், ஏன் லிப்ட் பற்றிக்கூட கருத்துச் சொல்ல எங்களுக்கு உரிமை கிடையாது.

வீட்டில் நான் செய்ய வேண்டிய ஒரே வேலை, வாவ் கவுரி! எவ்வளவு பிரம்மாண்டமான வீட்டைக் கட்டியிருக்கிறாய் என்று அமைதியாக அமர்ந்து பாராட்டுவதுதான்.

ஆர்யன், சுகானா, அப்ராம் என பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே என்ன வேண்டுமானாலும் சத்தம் போட்டுக் கொள்ளலாம். ஆனால் வீட்டுக்குள் இறுதி முடிவு எடுப்பது கவுரிதான்.

எனது பெற்றோர் நான் இளம் வயதில் இருக்கும்போதே இறந்துவிட்டனர். அதனால் என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக இருந்தது சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதுதான்.

கவுரியைத் திருமணம் செய்துகொண்டபோது எனக்கென்று சொந்தமாக ஒரு வீடுகூட கிடையாது.

ஒரு வீட்டுக்காக நீங்கள் உண்மையாகப் பிரார்த்தனை செய்தால், வாழ்க்கையில் உங்களுக்கு மிக அழகான வீடு கிடைக்கும்.

எப்போதும் பெரிதாகச் சிந்தியுங்கள். பெரிதாக நம்புங்கள் என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT