‘ராட்சசன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் ராம்குமார் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘இரண்டு வானம்’.
இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஆத்தி என்னாலே முடியலையே’ தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மலையாளத் திரையுலகின் சென்சேஷனல் நாயகி மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள ‘ஆத்தி என்னாலே முடியலையே’ பாடலுக்கு லவர்தன் வரிகள் எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைஞரும் பிரபலப் பாடகருமான அந்தோணி தாசன் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர்.
"ஆத்தி என்னாலே முடியலையே... கெஞ்சிப் பார்த்தாலும் கேக்கலையே... விட்டு ஓடத்தான் வழியில்லையே..." எனத் தொடங்கும் இப்பாடல் வரிகள், வாழ்க்கையின் போராட்டங்களையும், துயரங்களையும் தாண்டி முன்னேறத் துடிக்கும் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன. அந்தோணி தாசனின் கணீர் குரலும், திபு நினன் தாமஸின் துள்ளலான இசையும் இப்பாடலுக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.
இப்படத்திற்கு தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சரிகம யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ள இப்பாடல் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.