தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பவர் த.வெ.க தலைவர் விஜய். இவர் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற முதலமைச்சர், தேர்தல் விதிகளின் படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, முதலமைச்சர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் யார் போட்டியிடுவார்? என்ற எதிர்பார்ப்பும், யூகங்களும் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இதுவரை வெளியான யூகங்களின் படி, சின்னத்திரை நடிகரும், முதலமைச்சர் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் வெங்கட்டின் பெயர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சஞ்சீவ் வெங்கட் பங்கேற்றார். அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே மிக வேகமாகவும் நேர்மையாகவும் செயல்பட்டு வருகிறார். 'முதல்வன் 2' படம் பார்ப்பது போல இருக்கிறது.
இன்னும் சில ஆண்டுகளில் தமிழ்நாடு சிங்கப்பூர் போல மாறும். உலகத்தர மருத்துவம், கல்வி, பெண்கள் பாதுகாப்பு எல்லாம் சாத்தியமாகும். விமர்சனங்களை தாண்டி தனது விடாமுயற்சி மற்றும் வைராக்கியத்தால் விஜய் இன்று அசைக்க முடியாத ஆலமரமாக உயர்ந்துள்ளார் என்றார்.
இதனிடையே, திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சஞ்சீவ், அது சூழ்நிலையைப் பொறுத்தது. தற்போதைக்கு நான் அதைப்பற்றி யோசிக்கவில்லை. காலம்தான் பதில் சொல்லும் என்றார்.
முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பணியாற்றி வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.