சினிமா செய்திகள்

சம்ஹாரம்- திரை விமர்சனம்

Maalaimalar

கதை

தனது தங்கையின் திருமணம் மறுநாள் காலை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் நாயகன் பிரஜின்.

ஆனால் அந்த திருமணத்தில் விருப்பமில்லாத அவரது தங்கை ஷருமிஷா, தனது காதலனுடன் இரவோடு இரவாக வீட்டை விட்டு தப்பிச் செல்ல திட்டமிடுகிறார். இதற்கிடையே, ஒரு நபர் தனது மகளுடன் அந்த வீட்டில் ஒரு இரவு தங்க அனுமதி கேட்க, பிரஜினும் அதற்கு சம்மதிக்கிறார்.

இந்த சூழ்நிலையில், திருமணம் செய்ய வரவிருக்கும் மாப்பிள்ளையை கொலை செய்ய ஷருமிஷாவும் அவரது காதலனும் திட்டமிடுகிறார்கள்.

அதே நேரத்தில், அடைக்கலம் கேட்டு வந்த அப்பாவும் மகளும் அதே மாப்பிள்ளையை குறிவைக்கிறார்கள். மறுபக்கம், பிரஜினும் அவரது வீட்டுக் காவலாளியும் ஏதோ மர்மமான விஷயங்களில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகசியத்துடன் இருக்கும் அந்த வீட்டில், இரவு முழுவதும் நடக்கும் சம்பவங்களே படத்தின் கதையாக நகர்கிறது.

நடிகர்கள்

நாயகனாக நடித்து இருக்கும் பிரஜின், நல்லவரா கெட்டவரா என்று கடைசி வரை யூகிக்க முடியாத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். முகபாவனைகள் மற்றும் அமைதியான நடிப்பு மூலமாக கதாபாத்திரத்திற்கு தேவையான மர்மத்தை தக்க வைத்திருக்கிறார். கதையின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷருமிஷா, உணர்வுப்பூர்வமான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

வில்லனாக வரும் கணேஷ் சாவரட்டில், திரையில் தோன்றும் ஒவ்வொரு முறையும் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகிறார். அவரது உடல்மொழியும், முரட்டுத்தனமான நடிப்பும் கதாபாத்திரத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. நியா வர்கீஸ், ராஜ்குமார், தென்றல் ராஜா, ராம் பிரபா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சரியாக கையாள்ந்திருக்கிறார்கள்.

இயக்கம்

ஒரே வீடு, ஒரே இரவு, குறைவான கதாபாத்திரங்கள், தொடர்ந்து வரும் மர்மங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராம் பிரபா. ஒரு இரவில் நடக்கும் கதையை பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையாக வடிவமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு ரகசியம், ஒவ்வொரு திருப்பத்திற்கும் ஒரு காரணம் என கதையை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சித்திருக்கிறார். சில குறைகள் இருந்தாலும், யூகிக்க முடியாத திருப்பங்களும், விறுவிறுப்பான திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு

ஒரே வீட்டுக்குள் கதை முழுவதும் நடந்தாலும், ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம் அந்த இடத்தை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி, சலிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இசை

இசையமைப்பாளர் வி.ஜி. ஹரி கிருஷ்ணன், பாடல்கள் இல்லாததால் முழுக்க முழுக்க பின்னணி இசையையே நம்பியிருக்கிறார். சில இடங்களில் அது காட்சிகளுக்கு வலு சேர்த்தாலும், பல இடங்களில் தேவைக்கு அதிகமாக சத்தமாக இருப்பது சற்று உறுத்தலாக இருக்கிறது.