'கட்சி சேரா' மற்றும் 'ஆச கூட' போன்ற உலகளாவிய ரீதியில் வைரலான இண்டீபெண்டண்ட் ஹிட் பாடல்களைக் கொடுத்த இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர் தனது அடுத்த அதிரடி இண்டீ பாடலான ‘ரதிமா’ பாடலை வெளியீட்டுள்ளார்.
திங்க் மியூசிக் நிறுவனத்தின் ‘திங்க் இண்டீ’ லேபிளின் கீழ் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
வழக்கமான காதல் தோல்விப் பாடல்கள் போல சோகமாகவோ அல்லது கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகவோ இல்லாமல், காதலை அழகான நினைவுகளுடன் விடைபெற்று ஏற்றுக்கொள்ளும் ஒரு துள்ளலான பாணியில் இப்பாடலை சாய் அபயங்கர் உருவாக்கியுள்ளார்.
சமகாலத்திய நடன இசையையும், கவாலி இசை வடிவத்தையும் கலந்து அழகான வரிகளுடன் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
சாய் அபயங்கரின் முந்தைய பாடல்களில் புதுமுகங்கள் மற்றும் பிரபல நடிகைகள் நடித்து ஹிட் அடித்த வரிசையில், இப்பாடலின் மியூசிக் வீடியோவில் 'காந்தா' பட புகழ் முன்னணி இளம் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே முதன்மை கதாபாத்திரமான 'ரதிமா'வாக நடித்துள்ளார்.
இவருடன் இணைந்து சாய் அபியங்கரும் இந்த வீடியோவில் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இசையமைத்து, தயாரித்து, பாடியுள்ளார். இவருடன் இணைந்து பெண் குரல்களில் நர்கிஸ் , அஷ்மா மற்றும் சாய் ஸ்மிருதி ஆகியோர் பாடியுள்ளனர்.
பிரபல பாடலாசிரியர் விவேக் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். சாய் அபயங்கரின் ஆஸ்தான இயக்குநரான தேஜோ பரத்வாஜ் இப்பாடலை இயக்கியுள்ளார். 'மஞ்சும்மெல் பாய்ஸ்' புகழ் பிரபல ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித் காட்சிகளைப் படமாக்கியுள்ளார்.
கெபா ஜெரெமையா (எலக்ட்ரிக் & பேஸ் கிட்டார்), ராபின் செபாஸ்டியன் (கூடுதல் கிட்டார்), சச்சின் கவிதியா (புல்புல் தரங்), ஆஷிஷ் (புல்லாங்குழல்) மற்றும் சின்மயி (வயலின்) போன்ற முன்னணி கலைஞர்கள் பங்களித்துள்ளனர். சென்னை ‘யோலோ ரெக்கார்ட்ஸ்’ ஸ்டுடியோவில் சாய் அபயங்கர் மிக்ஸிங் செய்ய, ரூபேந்தர் வெங்கடேஷ் மாஸ்டரிங் செய்துள்ளார்.
சினிமா துறையிலும் விஜய் சேதுபதியின் 'பத்தா' மற்றும் தனுஷின் 'ஓம் சாப்டர் 1' போன்ற பெரிய படங்களுக்கு இசையமைத்து வரும் சாய் அபயங்கர், தனது 6-வது தனித்துவமான இண்டீ சிங்கிளான ‘ரதிமா’ மூலம் மீண்டும் ஒருமுறை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகத் தொடங்கியுள்ளார்.
இப்பாடலின் கவர்ச்சிகரமான ஹூக் ஸ்டெப் மற்றும் துள்ளல் இசை இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து இணையதளங்களில் வைரலாகி வருகிறது.