சினிமா செய்திகள்

Gen-Z Rom-Com: '96' புகழ் ஆதித்யா பாஸ்கர் நடிக்கும் 'Feel My Love' டீசர் வெளியானது!

டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்கள் டிரெய்லர் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குநர் ஹரி பிரகாஷ் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படமான 'Feel My Love' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. பிரபல இசை நிறுவனமான ஆதித்யா மியூசிக் தமிழ் யூடியூப் தளத்தில் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தலைமுறையினரின் காதல் எல்லைகள், உணர்வுகளின் ஆழம், வாழ்க்கை மதிப்பீடுகள் மற்றும் யாரும் எதிர்பார்க்காத ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை மையமாகக் கொண்டு, ஒரு புத்துணர்ச்சியூட்டும் ரொமான்டிக் காமெடித் திரைப்படமாக 'Feel My Love' உருவாகியுள்ளது.

இளமைத் துள்ளல், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த காட்சிகளுடன் இந்த டீசர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்

இப்படத்தில் '96' திரைப்படப் புகழ் ஆதித்யா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்க, அவருடன் இணைந்து மூத்த நடிகர் எம்.எஸ். பாஸ்கர், அம்மு அபிராமி, ஐரா, ராஜய்யப்பா, மதுசூதன் ராவ், நோபல் கே. ஜேம்ஸ், பிரியங்கா திம்மேஷ், சுபாஷ், ஆதன் குமார் மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்ட பல முன்னணி மற்றும் இளம் நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஏ.என். பாலாஜி தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜரவி வர்மா.எஸ் மற்றும் பாலசுப்பிரமணியன்.ஜி ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். எம்.எஸ். சதீஷ் ஒளிப்பதிவு செய்ய, அஜய் மனோஜ் படத்தொகுப்புப் பணிகளையும், விவேக் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். மேலும், டேஞ்சர் மணி சண்டைப் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

இத்திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஆதித்யா மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT