நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "கருப்பு." இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது வருகிற மே 14-ஆம் தேதி உலகளவில் வெளியாக இருக்கிறது. கருப்பு திரைப்படம் ஆந்திராவில் "வீரபத்ருடு" என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.
அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் முதலமைச்சர் விஜய் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு வந்த போது, பலரும் அவரை நம்பவில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "எப்போதும் மக்கள் ஒருவர் மேல் நம்பிக்கை வைப்பது சாதாரணமாக நடக்காது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மீது பலருக்கு மாற்றுக்கருத்து இருந்தது. ஆனால், அவர் அதை எல்லாம் மீறி தன்னுடைய முயற்சிகளைச் செய்தார். இப்போது அவர் தமிழ்நாட்டின் முதலைமைச்சர் ஆகிவிட்டார். மாண்புமிகு முதல்வர் ஜோசப் விஜய். இரண்டு ஆண்டுகள் முன் அவர் அரசியலுக்கு வந்தபோது, அவரை பலர் நம்பவில்லை. ஆனால், அவரால் முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது.
அதுதான் இங்கு பவன் கல்யாண் சாருக்கு நடந்தது. மக்கள் ஒருவரை நம்பும்போது அது பெரிய ஆற்றலாக மாறும். அதுவேதான் எனக்கும். நான் என்னை நம்பினேன். இப்படத்துக்கு நான் இயக்குநர் என அறிவித்தபோது சூர்யா சாரிடம்கூட, 'ஏன் ஆர்.ஜே.பாலாஜி' என்ற கேள்விகளைக் கேட்டார்கள். ஆனால், படத்தின் டீசர் வந்தபின்னர் என்மேல் நம்பிக்கை வந்தது. டிரெய்லர் வந்த பின்னர், சூர்யாவுக்கு ஆர்.ஜே. பாலாஜி வில்லனா என கேள்விகள் எழுந்துள்ளது. மீண்டும் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, மீண்டும் நான் அமைதியாக இருந்து படம் அதனை நிரூபிக்கும் எனக் காத்திருக்கிறேன்," என்றார்.