ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக உருவாகும் "இராவணன் சோலையில் சிவன் மலை" திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை, சென்னையில் உள்ள இசைஞானி இளையராஜாவின் இசைக்கோவிலில் செப்டம்பர் 14 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில், இசைஞானி இளையராஜா, திரு. கங்கை அமரன், இயக்குனர் ஞான ராஜசேகரன், இயக்குனர் பாணர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கே. ஸ்ரீதர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி இந்த விழாவை முறைப்படி தொடங்கி வைத்தனர்.
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாக்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளிமலை பகுதியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் பல்வேறு மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தென்னக திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி மற்றும் பிரபல நட்சத்திரங்கள் இதில் இணைகிறார்கள்.
ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இசைஞானி இளையராஜா இசையமைப்பில், உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இத்திரைப்படத்திற்கு எம். வி. பன்னீர்செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை காசி விஸ்வநாதன் மேற்கொள்ள, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளை மைக்கேல் வடிவமைக்கிறார்.
இவ்வாறு பலம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, எதார்த்தமான கதைக்களம் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களின் பிரம்மாண்ட சேர்க்கையோடு உருவாகும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.