சினிமா செய்திகள்

ராவணன் முற்றிலும் மோசமானவர் அல்ல: நடிகை சாய் பல்லவி

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸில் ராமாயணா திரைப்படத்தின் ப்ரமோஷன் காட்சி நடைபெற்றது.

ராமாயணத்தில் வரும் ராவணன் முற்றிலும் கெட்டவர் அல்ல என்றும், ராவணனை உதாரணமாக கொண்டு அனைவரும் தங்களுக்குள் இருக்கும் நன்மை, தீமைகளை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள ‘ராமாயணம்' ரைஸ் ஆஃப் எ லெஜெண்ட்’ திரைப்படத்தின் முதல் பாகம் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

ராமாயணா திரைப்படத்தில் நடிகர்கள் ரன்பீர் கபூர் ராமராகவும், யாஷ் ராவணனாகவும் மற்றும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர்.

இதையடுத்து உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள ராமாயணா திரைப்படம், வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

ராவணன் கதாபாத்திரம்

ராமாயணத்தில் தோன்றும் ராவணன், சீதையை கடத்திய வில்லனாகவும், ஒரு கற்றறிந்த ஆட்சியாளராகவும், சிவபெருமானின் தீவிர பக்தராகவும் மற்றும் பல அறிவுசார் கலைகளை கற்று தேர்ந்த ஒரு நபராகவும் அறியப்படுகிறார்.

இலங்கை நாட்டின் அரக்க மன்னராக ராவணன் அறியப்படுகிறார். இவர் சீதையை கடத்தி சென்றதையடுத்து, ராமர் உடனான போரில், இவரின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

முன்னோட்ட காட்சி

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸில் ராமாயணா திரைப்படத்தின் ப்ரமோஷன் காட்சி நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை சாய் பல்லவி ராமாயணத்தில் தோன்றும் ராவணன் கதாபாத்திரத்தை குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.

ராவணன் ஒரு உதாரணம்

அப்போது பேசிய அவர், நாம் அனைவரும் ராவணனை ஒரு உதாரணமாக கொண்டு, தங்களுக்குள் இருக்கும் நன்மை தீமைகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

“வேதவாக்கியத்தின்படி நீங்கள் ஒரு பக்தராக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் நன்மை தீமை என்ன என்பதை கண்டறிந்து, சுயபரிசோதனை செய்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

ஏனென்றால், ராவணன் முற்றிலும் கெட்டவர் அல்ல, நமக்குள் இருக்கும் ராவணனை நாம் கண்டறிந்து, காலப்போக்கில் மாற்றங்களை செய்வது முக்கியம்” என கூறினார்.

SCROLL FOR NEXT