வால்மீகி எழுதிய ராமாயணக் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியத் திரையுலகில் இதுவரை கண்டிராத மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் “ராமாயணா” திரைப்படத்தின் 'ராவண தாண்டவம்' பாடல் வெளியாகியுள்ளது.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், தேசிய விருது பெற்ற பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தின் மிரட்டலான 'ராவண தாண்டவம்' பாடல் தசரா பண்டிகையை முன்னிட்டு டி-சீரிஸ் யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் இணைந்து மிக முக்கியப் பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.
இப்படத்தின் தொழில்நுட்பப் பணிகளும், இசை அமைப்பும் சர்வதேசத் தரத்தில் வடிவமைக்கப்பட்டு வரும் வேளையில், ஸ்ரீதர் ராகவன் மற்றும் இயக்குநர் நிதேஷ் திவாரி இணைந்து இதற்குத் திரைக்கதை அமைத்துள்ளனர்.
மேலும், ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார்கள்.
தற்போது வெளியாகியுள்ள சிவனின் மீதான தீவிர பக்தியை வெளிப்படுத்தும் 'ராவண தாண்டவம்' பாடலை பிரபல ராக் பாடகர் விஷால் தத்லானி தனது கம்பீரமான குரலில் பாட, டாக்டர் குமார் விஸ்வாஸ் வரிகளை எழுதியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட முக்கிய இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியாகவுள்ள இந்த 'ராமாயணா' திரைப்படம், இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
பான்-இந்தியா திரைப்படமாக இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.