தென்னிந்திய திரை உலகில் அறிமுகமாகி, இன்று இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தனது வசீகர அழகாலும், இயல்பான நடிப்பாலும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ள ராஷ்மிகா, ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதுப்புது ஆச்சரியங்களை கொடுத்து வருகிறார்.
ராஷ்மிகாவின் சிறப்பு என்னவென்றால், அவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் முந்தைய படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதுதான். எளிமையான கிராமத்து பெண்ணாக இருந்தாலும் சரி, கம்பீரமான மகாராணியாக இருந்தாலும் சரி, கவர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, ஆக்ஷன் காட்சிகளில் ரத்தக்கறையுடன் மிரட்டும் வீராங்கனையாக இருந்தாலும் சரி... அந்த கதாபாத்திரமாகவே மாறி ரசிகர்களை வியக்க வைப்பதில் ராஷ்மிகா தனி முத்திரை பதித்து வருகிறார்.
ராஷ்மிகாவின் ஆரம்பகால வெற்றிப் படங்களில் முக்கியமானது ‘கீதா கோவிந்தம்’. இப்படத்தில் தாவணி அணிந்த எளிமையான, இயல்பான பெண்ணாக தோன்றிய ராஷ்மிகா, தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த கதாபாத்திரத்தில் இருந்த அழகும், வெட்கமும், குறும்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அதன்பிறகு ‘புஷ்பா’ படத்தில் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்த ராஷ்மிகா, தனது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தினார். கிராமிய தோற்றம், வித்தியாசமான உடல்மொழி, இயல்பான நடிப்பு என ஸ்ரீவள்ளியாகவே மாறிய ராஷ்மிகாவின் நடிப்பு இந்திய அளவில் பேசப்பட்டது.
மூக்குத்தியுடன் கம்பீரமாக ஜொலித்த மகாராணி ‘சாகா’ படத்தில் மகாராணி யேசுபாய் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்தபோது, ரசிகர்கள் அவரை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்தனர். மூக்குத்தி, அரச உடை, கம்பீரமான தோற்றம் என மகாராணியாகவே திரையில் ஜொலித்தார்.
அழுத்தமான கதாபாத்திரங்களில் மட்டும் அல்லாமல், கவர்ச்சியான தோற்றங்களிலும் ரசிகர்களை கவர்ந்திழுப்பதில் ராஷ்மிகா முன்னணியில் இருந்து வருகிறார். ‘காக்டெயில் 2’ படத்தில் சக நடிகையுடன் போட்டி போடும் அளவுக்கு கவர்ச்சிகரமான காட்சிகளில் நடித்திருந்தார். ராஷ்மிகாவின் கவர்ச்சி தோற்றம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியது. இதையெல்லாம் தாண்டி, தற்போது ‘மைசா’ படத்தில் ராஷ்மிகா நடித்துள்ள தோற்றம் ரசிகர்களை மிரள வைத்துள்ளது. ரத்தக்கறை படிந்த முகம், கையில் துப்பாக்கி, ஆக்ஷன் நிறைந்த தோற்றம் என இதுவரை பார்த்திராத ராஷ்மிகாவை இந்த படத்தில் ரசிகர்கள் பார்க்கவுள்ளனர்.
தாவணி அழகில் தொடங்கி, கிராமத்து ஸ்ரீவள்ளியாக மாறி, மகாராணியாக கம்பீரம் காட்டி, கவர்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து, இப்போது துப்பாக்கியுடன் ஆக்ஷன் களத்தில் இறங்கி ‘நேஷனல் கிரஷ்’ ஆக இருந்து வருகிறார்.