சினிமா செய்திகள்

90 அடி உயரத்தில் இருந்து குதித்தபோது ‘இதுதான் கடைசி’ என நினைத்தேன்: ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த திகில் அனுபவம்

இந்த உயரமான சண்டைக் காட்சி மட்டுமின்றி, ‘மைசா’ திரைப்படத்திற்காக ராஷ்மிகா தனது உடலை மிகவும் வருத்திக்கொண்டு உழைத்துள்ளார்.

தனது அடுத்த அதிரடித் திரைப்படமான ‘மைசா’ படப்பிடிப்பின் போது, 90 அடி உயரத்தில் இருந்து குதித்த சண்டைக் காட்சியில் ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவத்தை நடிகை ராஷ்மிகா மந்தனா பகிர்ந்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், அந்த நொடியில் தனது உயிர் பிழைக்குமா என்ற அச்சம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில் உருவாகி வரும் ‘மைசா’ திரைப்படத்தில், ராஷ்மிகா மந்தனா பல சவாலான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

கேரளாவின் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 90 அடி உயரத்தில் இருந்து பின்னோக்கி விழும் காட்சி படமாக்கப்பட்டது. இயல்பாகவே உயரத்தைப் பார்த்தால் அதிகம் பயப்படும் குணம் கொண்ட ராஷ்மிகா, பாதுகாப்பு கவசங்களுடன் இந்தக் காட்சியில் நடிக்கத் துணிந்தார்.

இதுதான் நமது கடைசி நிமிடம்

ஆனால், அவர் கீழே குதித்தபோது எதிர்பாராத விதமாக நடுவானில் அவரது உடல் தலைகீழாகத் திரும்பியது. அந்தச் சூழலில் அனைத்தும் மிக மெதுவாக நகர்வது போலத் தோன்றியதாகவும், “சரி, இதுதான் நமது கடைசி நிமிடம்” என்று தான் நினைத்ததாகவும் அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

பின்னர் படக்குழுவினர் துரிதமாகச் செயல்பட்டு அவரைப் பாதுகாப்பாக மீட்டனர்.

காயங்கள் நிறைந்த படப்பிடிப்பு

இந்த உயரமான சண்டைக் காட்சி மட்டுமின்றி, ‘மைசா’ திரைப்படத்திற்காக ராஷ்மிகா தனது உடலை மிகவும் வருத்திக்கொண்டு உழைத்துள்ளார். படப்பிடிப்பின் போது ஒரு நாளைக்குச் சுமார் 8 மணி நேரம் வீதம், ஒட்டுமொத்தமாக 20 மணி நேரத்திற்கும் மேலாகத் தண்ணீருக்கு அடியில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார்.

மேலும், கடினமான சேற்றுச் சண்டைக் காட்சிகளில் நடித்ததோடு, படப்பிடிப்பின் போது ஏற்பட்ட இடுப்புத் தசைநார் காயத்தையும் தாங்கிக்கொண்டு தனது காட்சிகளை அவர் நிறைவு செய்துள்ளார்.

தனது பயத்தை வென்று இந்தச் சவாலான காட்சிகளில் நடித்ததற்காகப் படக்குழுவினரும் ரசிகர்களும் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT