திரைத்துறையில் முன்னணி நடிகையாகவும், பலரது 'நேஷனல் க்ரஷ்' ஆகவும் வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, 'ப்ராஜெக்ட் அன்னபூர்ணா' என்ற புதிய தொண்டு திட்டத்தின் கீழ் 400 ஏழைக் குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த 400 குடும்பங்களுக்கும் அடுத்த ஒரு வருடத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவு தானியங்களை வழங்கப்போவதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் திருமணத்திற்குப் பிறகு இணைந்து நடித்துள்ள வரலாற்றுப் பின்னணி கொண்ட அதிரடித் திரைப்படமான 'ரணபலி' நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கியுள்ள இத்திரைப்படம், 1870-களில் தென்னிந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடூரமான 'தாது வருடப் பஞ்சம்' குறித்த வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் 'ஜெயம்மா' என்ற கணீரான கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார். பஞ்ச காலத்து மக்களின் துயரங்களை விவரிக்கும் இந்தத் திரைப்படத்தில் நடித்ததே, நிஜ வாழ்க்கையிலும் பசியால் வாடும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உத்வேகத்தைத் தனக்குக் கொடுத்ததாக ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார்.
"நான் திரையில் நடித்த ஜெயம்மா கதாபாத்திரத்திற்கும், நிஜ வாழ்க்கை ராஷ்மிகாவுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன; அதில் மிக முக்கியமானது இந்த உதவி செய்யும் குணம்" என அவர் தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உதவித் திட்டம் மிகவும் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தத்தெடுக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கும் ஒரே நேரத்தில் தலா 3 மாதங்களுக்குத் தேவையான முழுமையான ரேஷன் மற்றும் மளிகைப் பொருட்கள் நேரடியாக விநியோகிக்கப்படும்.
இந்தத் தொண்டுப் பணியை அடுத்த ஒரு ஆண்டு முழுவதும் (365 நாட்களும்) சுழற்சி முறையில் தொடர்ந்து நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.
ராஷ்மிகா வெளியிட்டுள்ள உணவுப் பட்டியலில் ஒரு குடும்பத்திற்கு 3 மாதங்களுக்குத் தேவையான 75 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மாவு , 3 கிலோ ராகி, 10 லிட்டர் சமையல் எண்ணெய், 15 கிலோ பருப்பு வகைகள், சோயா சங்ஸ், சர்க்கரை, டீதூள் உள்ளிட்ட 12 வகையான அத்தியாவசியப் பொருட்கள் துல்லியமாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
இதுவரை தான் செய்து வந்த சமூக உதவிகளைத் திரைமறைவிலேயே வைத்திருந்த ராஷ்மிகா, தற்போது மற்றவர்களுக்கும் இது ஒரு உத்வேகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பகிரங்கமாக அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
அவர் தனது பதிவில், "சினிமாவுக்காக நான் படும் கஷ்டங்கள், தூக்கமில்லாத இரவுகள், அடிபட்ட காயங்கள் மற்றும் சிந்திய கண்ணீர் என அனைத்திற்கும் இந்த மக்களின் முகத்தில் பார்க்கும் புன்னகையே விலைமதிப்பில்லாத மாற்றத்தைத் தருகிறது. மளிகைப் பொருட்களுக்கான செலவு மிச்சமாவதன் மூலம், அந்த ஏழைக் குடும்பங்கள் தங்களது பணத்தைச் சேமித்து, தங்களின் எதிர்காலத்தை சிறப்பாகத் திட்டமிட முடியும் என நம்புகிறேன்" என்று மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
திரைப்பட ரிலீஸை ஒட்டி ஆடம்பரமாகச் செலவு செய்யாமல், 400 குடும்பங்களின் பசியைப் போக்க முன்வந்துள்ள ராஷ்மிகாவின் இந்தத் தாயுள்ளத்திற்குத் திரையுலகினரும், ரசிகர்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.