நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் மிகப்பிரம்மாண்ட காவியத் திரைப்படமான 'ராமாயணம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டிற்கான அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படத்தின் டிரெய்லர், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற 'சான் டியேகோ காமிக்-கான்'நிகழ்ச்சியில் முதலில் திரையிடப்படவுள்ளது.
அமெரிக்காவின் சான் டியேகோ நகரில் நடைபெறும் இந்த சர்வதேசப் பாப் கலாச்சார விழாவில், 4,800 பேர் அமரக்கூடிய 'பால்ரூம் 20' அரங்கில் 'ராமாயணம்' குழுவின் சிறப்புப் பேனல் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், இயக்குநர் நிதேஷ் திவாரி, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா ஆகியோர் நேரடியாகப் பங்கேற்கின்றனர். உலகளாவிய பார்வையாளர்களுக்கு இந்திய இதிகாசத்தை எடுத்துரைப்பது, படத்தின் பிரம்மாண்ட உருவாக்க முறை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு குறித்து இக்குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.
காமிக்-கான் நிகழ்வில் சிறப்புப் பதிப்பு திரையிடப்பட்ட பிறகு, நாளை (ஜூலை 24) அன்று உலகளவில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். நாளை காலை 8:00 மணி முதல் 10:00 மணிக்குள்ளாக அனைத்து டிஜிட்டல் தளங்கள் மற்றும் திரையரங்குகளில் டிரெய்லர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
உலகளாவிய சந்தையைக் கவரும் வகையில், காமிக்-கான் நிகழ்வில் இத்திரைப்படத்தின் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்ட டிரெய்லர் திரையிடப்படுகிறது. இதில் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு, நடிகர்களின் உதட்டசைவை சரியாகப் பொருத்துவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பிரம்மாண்டமான நட்சத்திரப் பட்டாளம் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் ஸ்ரீ ராமராக ரன்பீர் கபூர், சீதா தேவியாக சாய் பல்லவி, இராவணனாக யாஷ், அனுமனாக சன்னி தியோல், லக்ஷ்மணனாக ரவி துபே, மண்டோதரியாக காஜல் அகர்வால் என பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து படத்திற்கு இசையமைக்கின்றனர்.
தர்மம், தியாகம் மற்றும் கடமையை மையமாகக் கொண்ட ஸ்ரீ ராமருக்கும், பேரரசும் பேராற்றலும் கொண்ட இராவணனுக்கும் இடையேயான பிரம்மாண்ட மோதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி (நவம்பர் 8, 2026)உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.