சினிமா செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ராமாயணா படக்குழு!

இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. 'ராமாயணா'.

இந்தியத் திரையுலகின் மிகப் பிரம்மாண்டப் படைப்பாக வெளியாகி உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் ‘ராமாயணா : பாகம் 1’ திரைப்படக் குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சந்திப்பின் முக்கிய அம்சங்கள்

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, இயக்குநர் நிதேஷ் திவாரி, ராமராக நடித்துள்ள ரன்பீர் கபூர், சீதையாக நடித்துள்ள சாய் பல்லவி மற்றும் இணைத் தயாரிப்பாளர் நீரஜ் சங்காய் ஆகியோர் பங்கேற்றனர்.

சந்திப்பின்போது தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா அமைச்சர் அமித்ஷாவுக்கு பூங்கொத்து வழங்கியும், இயக்குநர் நிதேஷ் திவாரி சால்வை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் இதிகாசக் காவியத்தை உலகத் தரத்திலான பிரம்மாண்டமான தொழில்நுட்பத்துடனும், கலைநயத்துடனும் திரைக்குக் கொண்டு வந்ததற்காகப் படக்குழுவினரை அமித்ஷா வெகுவாகப் பாராட்டினார்.

மேலும், ராமாயண இதிகாசத்தின் வரலாறு மற்றும் கலாச்சார முக்கியத்துவம் குறித்த அமித்ஷாவின் ஆழமான அறிவைக் கண்டு வியந்ததாகப் படக்குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை

நவம்பர் 5-ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரைக்கு வந்த ‘ராமாயணம்: பாகம் 1’ திரைப்படம், வெளியான 21 நாட்களில் உலகளவில் ரூ.1,755.60 கோடி வசூலித்து புதிய வரலாறு படைத்துள்ளது.

இதன் மூலம், அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் (ரூ.1,742 கோடி) வாழ்நாள் வசூல் சாதனையை முறியடித்து, அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் மட்டும் நிகர வசூல் ரூ.1,000 கோடியை நெருங்கி வருவதோடு, உலகளவில் விரைவில் ரூ.2,000 கோடி என்ற இமாலய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமாயணா Part -2

சுமார் ரூ. 4,000 கோடி பிரம்மாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோருடன் ராவணனாக யஷ், அனுமனாக சன்னி தியோல், லட்சுமணனாக ரவி துபே ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT