படத்தின் பிரம்மாண்டமான விசுவல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' திரைப்படத் தொடருடன் ஒப்பிடப்பட்டு வருகிறது.
இந்திய சினிமாவின் பெருமைமிக்க வரலாற்றுப் படைப்பாக உருவாகியுள்ள இயக்குநர் நிதேஷ் திவாரியின் 'ராமாயணா: தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்' திரைப்படத்தின் உலகளாவிய முதல் பிரீமியர் காட்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள அகாடமி மியூசியம் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த சிறப்புத் திரையிடலில் இயக்குநர் நிதேஷ் திவாரி, தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா மற்றும் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பாரம்பரிய உடைகளில் கலந்துகொண்டனர்.
திரைப்படத்தைப் பார்த்த சர்வதேச சினிமா விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான முதல் விமர்சனங்கள் வந்து குவிந்துள்ளன. குறிப்பாக, இப்படத்தில் ஸ்ரீராமர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ரன்பீர் கபூரின் அமைதியான மற்றும் தெய்வீகமான நடிப்பு பலரைக் கண் கலங்கச் செய்துள்ளதாகப் பார்வையாளர்கள் சமூக வலைதளங்களில் சிலாகித்து எழுதியுள்ளனர். மேலும், லங்காபதி ராவணனாக மிரட்டலான தோற்றத்தில் களமிறங்கியுள்ள நடிகர் யஷின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதுடன், அவரது அறிமுகக் காட்சிகள் திரையரங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பிரம்மாண்டமான விசுவல்ஸ், ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி ஆகியவை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற 'தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்' திரைப்படத் தொடருடன் ஒப்பிடப்பட்டு வருகிறது. இருப்பினும், சில பார்வையாளர்கள் படத்தின் இரண்டாம் பாதியின் நீளம் மற்றும் சில இடங்களில் உணர்ச்சிபூர்வமான ஆழம் குறைவாக இருப்பதாகத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் எதிர்வரும் நவம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.