நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ' ஜெயிலர் 2'. நெல்சன் இயக்கும் இப்படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் ஓ.டி.டி. ஒப்பந்தத்தில் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல் பாகமான 'ஜெயிலர்' படத்தின் டிஜிட்டல் உரிமத்தைப் பெற்ற பிரைம் வீடியோ, அதன் இரண்டாம் பாகத்தின் உரிமத்தையும் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ‘ஜெயிலர்’ படம் ரூ.100 கோடிக்கு முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், 'ஜெயிலர் 2' படத்திற்கான ஒப்பந்தம் ரூ.160 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு புதிய சாதனையை படைத்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இத்தகவல்கள் குறித்து படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த தகவல் உண்மை என்றால் இதுவரையில் ஒரு தமிழ் படத்திற்கு கிடைத்த மிகவும் விலையுயர்ந்த ஓடிடி ஒப்பந்தமாகவும் இது அமைகிறது. மணிரத்னத்தின் ' பொன்னியின் செல்வன்' படம் ரூ.125 கோடிக்கும், விஜய்யின் ' லியோ' படம் ரூ.120 கோடிக்கும், ரஜினிகாந்தின் ' கூலி' படத்தை பிரைம் வீடியோ ரூ.120 கோடிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.
‘ஜெயிலர் 2' படத்தில், ரஜினிகாந்த் 'டைகர்' முத்துவேல் பாண்டியன் என்ற தனது கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்கிறார். அவருடன் அவரது மனைவியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.