சினிமா செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு தடை: ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் அதிரடி அறிக்கை!

"ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது."

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பெயர் மற்றும் புகைப்படங்களை அரசியல் கட்சிகளோ அல்லது பிற அமைப்புகளோ தங்களின் சுயலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைமை அலுவலகம் இன்று அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: "நமது அன்பு தலைவர் திரு.ரஜினிகாந்த் அவர்களின் பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சியோ, அமைப்போ பயன்படுத்தக்கூடாது என தலைவரின் உத்தரவுப்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது." என கூறப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ரஜினிகாந்த் அவர்கள் நேரடி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதைத் தீர்க்கமாக அறிவித்து, தனது 'ரஜினி மக்கள் மன்றத்தை' மீண்டும் பழையபடி 'ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக' மாற்றினார். எனினும், தேர்தல் நேரங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்களின் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரசாரங்களில் ரஜினிகாந்தின் முகத்தையும் பெயரையும் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதனைத் தடுக்கும் பொருட்டும், ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையிலும், "தலைவர் ரஜினிகாந்தின் நேரடி உத்தரவின் பேரில்" இந்த அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர் மன்ற தலைமைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் பாயலாம் என்றும், ரசிகர்கள் தங்களின் பகுதிகளில் உள்ள பிற அமைப்பினர் தலைவரின் பெயரைப் பயன்படுத்துவதைக் கண்காணித்து தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.