சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த பேரன் யாத்ராவுடன் இணைந்து நடந்து செல்லும் அரிய புகைப்படம் ஒன்றை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தாத்தா - பேரனின் இந்த ஸ்டைலான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கிரீஸ் நாட்டிற்கு சென்றிருந்தனர்.
வழக்கமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் அதிகம் பகிர்ந்து கொள்ளாத ரஜினிகாந்த், இந்தப் பயணத்தில் தனது மனைவி லதா, மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டார். முன்னதாக, சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்த இந்தச் சுற்றுலாப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில், கூடுதல் நினைவுகளாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் முதல் புகைப்படத்தில், பழுப்பு நிற டி-ஷர்ட், கருப்பு நிற பேண்ட் மற்றும் கருப்பு நிற தொப்பி அணிந்து மிகவும் ஸ்டைலாக இருக்கும் ரஜினிகாந்த்தும், முழுக்க வெள்ளை நிற உடையில் இருக்கும் அவரது மூத்த பேரன் யாத்ராவும் அருகருகே இணைந்து நடந்து செல்கின்றனர்.
மற்றொரு புகைப்படத்தில், கிரீஸ் நாட்டின் பழமையான வரலாற்றுச் சின்னத்திற்கு முன்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இளைய மகன் லிங்கா ராஜாவுடன் இணைந்து புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார். நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் தங்களது தாத்தா ரஜினிகாந்த்துடன் இருக்கும் புகைப்படங்களைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
திரைப்படங்களைப் பொறுத்தவரை, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்ததாக அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தில் சிம்ரன், நயன்தாரா, ராஷி கண்ணா, ஸ்ரீலீலா மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.