இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் கூட்டணியில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "புதுப்பேட்டை." இந்தப் படத்தில் ஸ்னேகா, சோனியா அகர்வால், நிதிஷ் வீரா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது.
புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று ரசிகர்கள் பலமுறை இயக்குநர் செல்வராகவனிடம் கேட்டு வந்துள்ளனர். அவரும் புதுப்பேட்டை 2 படத்தை எடுக்கலாம் என்ற வகையிலும், இந்தப் படத்தை எழுதும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில், புதுப்பேட்டை 2 திரைப்படத்தை எழுதி முடித்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது நடிப்பு, இயக்கம் என் பம்பரமாக சுழன்று வரும் நிலையிலும் "புதுப்பேட்டை 2" குறித்த தகவலை செல்வராகவன் பதிவிட்டு இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும், இந்தப் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. முன்னதாக செல்வராகவன் நடிப்பில் உருவாகி இருக்கும் "மனிதன் தெய்வமாகலாம்" திரைப்படத்தின் "தங்கரத்தினமே" பாடல் வீடியோ வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகம் எதிர்பார்க்கப்படும் புதுப்பேட்டை 2 அப்டேட் வெளியானது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.