சினிமா செய்திகள்

‘ஓம்’ 6 மணி காட்சிக்கு அனுமதி - முதலமைச்சர் விஜய்க்கு தனுஷ் நன்றி தெரிவிப்பு!

படம் நவ.20ம் தேதி வெளியாக உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் ஓம்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் நாளை மறுநாள் (நவ.20) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது.

அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும்‘ஓம்’ திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்!

அனைவருக்கும் அன்பும், நன்றியும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய படங்கள் வெளியான ஒருவாரத்திற்கு, தினசரி 6 காட்சிகளுக்கு அனுமதி அளித்து இம்மாத தொடக்கத்தில் அரசு ஆணை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT