சினிமா செய்திகள்

பெத்தி- திரை விமர்சனம்

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மலைப்பகுதியை அழகாக படம் பிடித்து இருக்கிறது.

Maalaimalar

கதை

மலை கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ராம் சரண், ஊரே அசந்து போகும் அளவிற்கு கிரிக்கெட் வீரராக இருக்கிறார். என்னதான் விளையாட்டு வீரராக இருந்தாலும், மேல் தட்டு மக்கள் இவரை மலை சாதி என்று ஒதுக்கி வைக்கிறார்கள்.

மேலும் இவருக்கும் ஊர் மக்களுக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் பல இடங்களில் இவர்கள் அவமானப் படுத்தபடுகிறார்கள். இந்த அவமானத்தை துடைக்கவும், தனக்கான அடையாளத்தையும் உருவாக்கவும் ராம் சரண் முயற்சி செய்கிறார்.

இறுதியில் தனக்கான அடையாளத்தை ராம் சரண் உருவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்கள்

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ராம் சரண், நடிப்பு படத்திற்கு பெரிய பலம். உடல்மொழி, உணர்ச்சி வெளிப்பாடு என படம் முழுவதையும் தனது தோளில் சுமந்து செல்கிறார். குறிப்பாக, விளையாட்டு சம்பந்தமான காட்சிகளிலும், உணர்வுப்பூர்வமான தருணங்களிலும் அவரது உழைப்பு தெளிவாக தெரிகிறது.

கதாநாயகியாக நடித்துள்ள ஜான்வி கபூர் கதாபாத்திரத்திற்கு இன்னும் வலுவான எழுத்து கொடுத்திருக்கலாம். கவர்ச்சியில் கவர்ந்தாலும் நடிப்பால் கவராதது வருத்தம். ஜெகபதி பாபு, சிவராஜ் குமார் ஆகியோரின் அனுபவ நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

இயக்கம்

கிராமத்தில் வாழும் பெத்தி என்ற இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து நகரும் கதையில், விளையாட்டையும், கிராம மக்களின் போராட்டத்தையும் இணைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் புஜ்ஜி பாபு சனா. கதையின் மையக்கரு புதிதாக இல்லாவிட்டாலும், அதனை உணர்வுகளுடன் சொல்ல முயற்சித்திருப்பது படத்தின் பலம்.

படத்தில் வரும் கிரிக்கெட் போட்டிகள், மல்யுத்த பயிற்சி காட்சிகள் மற்றும் சில முக்கியமான உச்சக்கட்ட தருணங்கள் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், படத்தின் நீளம் மற்றும் திரைக்கதை மிகப்பெரிய குறையாக மாறுகிறது.

முதல் பாதியில் பல காட்சிகள் தேவையில்லாமல் நீள்கின்றன. சில பகுதிகள் மீண்டும் மீண்டும் வருவது போன்ற உணர்வையும் தருகின்றன. இரண்டாம் பாதியில் சில உணர்ச்சிகரமான தருணங்கள் வேலை செய்தாலும், இறுதிக்கட்டம் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

கிராமத்து பின்னணி, விளையாட்டு, குடும்ப உணர்வுகள், அரசியல், சாதி மோதல்கள் என பல விஷயங்களை ஒன்றாக கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர்.

இசை

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை மற்றும் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக சில பாடல்களும், உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கான பின்னணி இசையும் படத்தின் தரத்தை உயர்த்துகின்றன.

ஒளிப்பதிவு

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு மலைப்பகுதியை அழகாக படம் பிடித்து இருக்கிறது.