டெல்லியில் மாணவர்கள் மற்றும் 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பினர் நடத்திய அமைதியான 'சன்சத் சலோ' (பாராளுமன்ற முற்றுகை) பேரணியின் மீது நடத்தப்பட்ட காவல்துறை தடி அடி அடக்குமுறை தாக்குதலுக்கு எதிராக பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் 'பா.ரஞ்சித்' தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
மேலும், சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து கைதான ரேப் பாடகர் 'தெருக்குரல்' அறிவு'-க்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
"பொறுப்புக்கூறலை வலியுறுத்தித் தொடங்கிய இந்த இயக்கம், கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் அரசை ஏற்க மறுக்கும் ஒரு முழு தலைமுறையின் திரண்ட கோபமாகவும் போராட்டமாகவும் மாறியுள்ளது."
அமைதியான வழியில் போராடும் மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, நியாயமான ஜனநாயகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க மத்திய அரசுக்கு விருப்பமில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. அடக்குமுறைகள் ஒருபோதும் பொறுப்புக்கூறலுக்கு மாற்றாக முடியாது.
டெல்லி தெருக்கள் முதல் பல்வேறு மாநிலப் போராட்டங்கள் வரை, மற்றும் 'தெருக்குரல்' அறிவு போன்ற கலைஞர்கள் நீட் தேர்வுக்கு எதிராக குரல் எழுப்பி வருவது வரை அனைத்தும் ஒரே கோரிக்கையைத் தான் வலியுறுத்துகின்றன. தொடர்ச்சியாகத் தோற்றுப்போகும் பொதுக் கல்வி முறைக்கும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்கக் கோரும் மக்களின் போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.
இந்தியாவிற்கு வெளியே வாழும் புலம்பெயர் இந்திய இளைஞர்களும் இந்தப்போராட்டத்திற்கு ஆதரவாக உலகளவில் குரல் கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது நாட்டின் ஒவ்வொரு இளைஞனின் எதிர்காலத்திற்கான போராட்டம்.
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னை தலைமைச் செயலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட முயன்ற ரேப் பாடகர் அறிவு மற்றும் அவருடன் இருந்தவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
கைதைத் தொடர்ந்து, தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா , பாடகர் அறிவை தனது அலுவலகத்திற்கு அழைத்து அவரது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். பாடகர் அறிவு, டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையைக் கண்டித்ததுடன், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து துணைநிற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
"கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், தொழிற்சங்கங்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொரு குடிமகனும் நாடு தழுவிய இந்தப்போராட்டத்திற்கு தங்களது முழுமையான ஆதரவை வழங்க வேண்டிய தருணம் இது.
நீதிக்காகவும், பொறுப்புக்கூறலுக்காகவும், மக்களுக்குச் சேவை செய்யும் பொதுக் கல்வி முறைக்காகவும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குரல் எழுப்ப வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.