சினிமா செய்திகள்

Pa Ranjith | காளிதாஸ் 2 பார்த்து விட்டேன்... மேடையிலேயே ரிவ்யூ சொன்ன இயக்குநர் பா ரஞ்சித்

சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

மாலை மலர்

2019-ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற 'காளிதாஸ்' படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'காளிதாஸ் 2' திரைப்படம்.

இந்தப் படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், 'ஆடுகளம்' கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி.எம். கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் 'பூவே உனக்காக' படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார்.

படத்திற்கு சாம் சி. எஸ். இசை அமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும், தயாரிப்பாளருமான பைவ் ஸ்டார் செந்தில், அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா ரஞ்சித், "தமிழ் ரசிகர்கள் சிறிய படங்களுக்கு வரவேற்பு அளிப்பதும், சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர்களும் கிடைக்கின்றன. இங்கு சிறிய திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கத்தான் செய்கிறது.

நேற்று (மார்ச் 19) வெளியான சிறிய திரைப்படம் "யூத்" நல்ல வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது. நானும் தொடர்ந்து சிறிய படங்களை தயாரித்து வருகிறேன். மேலும் இந்த ஆண்டு என் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இரு திரைப்படங்களை திரைக்கு கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது. மக்களை நம்பி தான் படம் எடுக்கிறோம். ஓ.டி.டி. நிறுவனங்களை கடந்து தியேட்டர்கள் தான் எங்களது நம்பிக்கை.

காளிதாஸ் 2 படத்தை நான் பார்த்து விட்டேன். மூன்று பெண் கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய, சாதாரண கதையை வைத்து கொண்டு அர்ப்பணிப்புடன் உழைத்தால் மாபெரும் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணம் தான் "சிறை" திரைப்படம்," என்று தெரிவித்தார்.