சினிமா செய்திகள்

ஓடிடி விவகாரம்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு கடிதம் தரவேண்டாம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தல்!

திரையரங்கு உரிமையாளர்கள் விதித்த 8 வார ஓடிடி விதிகளுக்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஓடிடி வெளியீடு தொடர்பாக தயாரிப்பாளர்கள், திரைப்பட உரிமையாளர்களுக்கு எந்த கடிதமும் அளிக்கவேண்டாம் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

“தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் 8-வாரங்களுக்கு பிறகு தான், OTT-வெளியீடு என்று கடிதம் கொடுத்தால் தான் திரைப்படங்களை வெளியிட முடியும் என்று நிர்பந்தம் செய்வதை, நமது தமிழ் திரைப்பட தயரிப்பாளர் சங்கம் இது வரை ஏற்றுக்கொள்ளவில்லை. அது பற்றி பேச்சு வார்த்தைக்கு ஹைதராபாத்-ல் மே-10 அன்று அழைத்திருக்கிறோம்.

மேலும் இந்த பேச்சுவார்த்தை குறித்து, தமிழ் நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம், மற்றும் விநியோகஸ்தர் சங்கங்களுக்கு கடிதமும் கடந்த வாரமே அனுப்பி உள்ளோம்.

இந்நிலையில், சிறு படங்கள் மற்றும் மத்திய பட்ஜெட் படங்கள் 4-வாரங்களுக்கே OTT யில் விற்பனை ஆகாத இந்த சூழ்நிலையில், OTT பற்றி 4-மாநில தயாரிப்பாளர்கள் சங்கமும் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் பொழுது, தன்னிச்சையாக முடிவு செய்து, இந்த வாரம் வெளியாக உள்ள திரைப்படங்களுக்கு 8-வாரங்களுக்கு பிறகு தான் OTT வெளியீடு, என்று கடிதம் கொடுத்தால் தான், திரைப்படங்களை வெளியிட முடியும் என்று விநியோகஸ்தர்கள் சங்கமும், திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமும் கட்டாயமாக கேட்டு பெறுவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மேலும், இந்த விஷயம் குறித்து வருகிற 26.04.2026 அன்று நடைபெறவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

ஆகையால், திரைப்பட வெளியீடு குறித்து, தமிழ் திரைப்பட விநியோகஸ்தர் சங்கமோ, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கமோ கடிதம் கொடுக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால், அதை உடனே தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் அத்தகைய கடிதத்தை நமது சங்கத்தின் அனுமதி இல்லாமல் எந்த தயாரிப்பாளரும் கொடுக்க வேண்டாம் என்று அனைத்து தயாரிப்பாளர்களையும் கேட்டு கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.