நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மேலும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. குறிப்பாக சிலர் ஜோதிகாவை தனிப்பட்ட முறையில் விமர்சித்த நிலையில், அவர்களுக்கு அவர் நேரடியாகவும் காரசாரமாகவும் அளித்த பதிலடிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கொஞ்சம் சீக்கிரமா வந்துட்டீங்க மேடம் என்று கிண்டலடித்த நபருக்கு, எதுவுமே தாமதம் இல்லை. முதலில் சமூகத்திற்கு உங்களுடைய பங்களிப்பு என்ன என்பதை பற்றி யோசியுங்கள் என்றார்.
என்ன வேணாலும் பேசிட்டு மும்பைக்கு போயிடுவீங்க என்ற விமர்சனத்திற்கு, நான் எங்கே போவேன்? இந்தியாவில்தான் வாழ்கிறேன். இன்னும் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்றார்.
மாணவர்கள் தாக்கப்படுவதை விட அரசியல் தான் நடக்கிறது என்ற கருத்துக்கு, அரசாங்கம் மாணவர்களின் மண்டையையும் உடலையும் அடித்து உடைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த பதிவுகளுக்காக உங்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டிற்கு, அப்படியானால் நீங்களும் எதிர்க்கட்சியிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டுதான் பேசுகிறீர்கள் என்று நான் எடுத்துக்கொள்ளலாமா என சரவெடியாய் பதிலளித்துள்ளார்.
ஜோதிகாவின் இந்த தைரியமான பதிலடிகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.