சினிமா செய்திகள்

வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம் - YG மகேந்திரன்

நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும்.

மாலை மலர்

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக் குமார் கலைவாணி இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் வாழ்வை காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் "நீ Forever". இந்தப் படம் வருகிற மார்ச் 27-ஆம் தேதி வெளியாகிறது. "தருணம்" என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் YG மகேந்திரன், "முதலில் இறைவனுக்கு என் நன்றி. இத்தனை ஆண்டுகளாக பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமீப காலமாக எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்து வருவது மிகவும் சந்தோஷம்.

இந்த “நீ Forever” படத்தின் குழு ஒரு வெற்றி குழு என்று நான் நம்புகிறேன். இயக்குநர் அசோக் முதலில் கதையை சொன்னபோது அவருடைய நம்பிக்கை எனக்கு மிகவும் பிடித்தது. நல்ல கதையை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் இளைஞர்களை நிச்சயமாக கவரும். பழமை மற்றும் புதுமை இரண்டையும் அழகாக இணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

நல்ல கதை இருந்தால் சிறிய படங்களும் பெரிய வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கும். இசை, ஒளிப்பதிவு, காட்சியமைப்பு அனைத்தும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அனைவரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரிக்கவும். நன்றி," என தெரிவித்தார்.