கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் டாக்ஸிக். படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹீமாகுரேசி, தாராசுதாரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.
வருகிற 26-ந் தேதி சர்வதேச அளவில் படம் திரைக்கு வர இருக்கிறது. கே.வி.என். புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூரில் நேற்று மாலை நடந்தது.
விழாவில் நயன்தாரா பேசியதாவது:-
நிறைய நடிகர்-நடிகைகள் நடிக்கும் படங்களை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோன்ற படங்களில் நடிப்பதற்கு நான் சற்று தயங்குவேன். கீது மோகன்தாஸ் இந்த படத்தில் நடிப்பதற்கு என்னை அழைத்தபோது நான் நடிக்க மறுத்தேன்.
ஆனால் கீது என்னிடம் 10 மில்லியன் கேள்விகளை கேட்டார். ஒரு வழியாக நான் அவரிடம் "சரி வந்து கதை சொல்" என்றேன். வந்து கதையை சொன்னதும் அதைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
உடனடியாக அந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதித்தேன். இது ஒரு சாதாரண படம் அல்ல. படங்களின் விளம்பர விழாக்களுக்கு செல்வதும் உரையாற்றுவதும் எனக்கு கடினமாக இருப்பதால் நான் செல்வதில்லை. ஆனால் யஷிக்காக மட்டுமே இங்கு வந்தேன்.
பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். அவர்கள் அனைவரில் இருந்தும் வேறுபட்டவர் யஷ். அவரைப் போல கடினமாக உழைக்கும் ஒருவரை நான் பார்த்ததில்லை. யஷ் உண்மையிலேயே ஒரு மான்ஸ்டர்.
இவ்வாறு அவர் கூறினார்.