இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய இயக்குநர் மிஷ்கின், நடிகர் விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பு மற்றும் நடிப்புத் திறனை வியந்து பாராட்டியதுடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானுடன் ஒப்பிட்டுப் பேசியது தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மேடையில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசிய இயக்குநர் மிஷ்கின், "விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாராலும் இந்த கதாபாத்திரத்தை இவ்வளவு கச்சிதமாகச் செய்திருக்க முடியாது. 'ஏன், கமல் சார் இதைவிடச் சிறப்பாகச் செய்திருக்க மாட்டாரா?' என்று நீங்கள் கேட்கலாம்.
இல்லை, என்னைப் பொறுத்தவரை ஒரு பெரிய ஸ்டாரான அமீர் கானால் கூட இந்த கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி கொடுத்த நியாயத்தைக் கொடுத்திருக்க முடியாது. விஜய் சேதுபதி ஒரு பிரம்மாண்டமான எரிமலை போன்றவர்," என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், "விஜய் சேதுபதி இந்தப் படத்தில் தனது சுயநலமற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். லாரன்ஸ் ஒலிவியர் அல்லது சோய் மின்-சிக் போன்ற உலகத் தரம் வாய்ந்த நடிகர்களுடன் என்னால் பணியாற்ற முடியாமல் போயிருக்கலாம், ஆனால் விஜய் சேதுபதியுடன் பணியாற்றியதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன்.
என் படம் நன்றாக இல்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள். படம் நன்றாக இருந்தால் மட்டுமே ஓட வேண்டும். ஆனால், விஜய் சேதுபதியின் நடிப்பு நிச்சயம் உங்களை வியக்க வைக்கும்," என மிக ஆணித்தரமாகக் கூறினார்.
மிஷ்கினின் பாராட்டுக்கு நெகிழ்ச்சியுடன் பதிலளித்த விஜய் சேதுபதி, "ட்ரெய்ன் படப்பிடிப்பு தளம் என்பது என் வீட்டுத் திருமணம் போல எப்போதும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட்டமாகவும் இருந்தது. மிஷ்கின் சார் படப்பிடிப்பின் போது ஒரு நெகிழ்ச்சியான வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
தினமும் சிறப்பாகப் பணியாற்றும் ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் ஒரு தொழில்நுட்பக் கலைஞருக்குத் தலா ரூ.1,000 வழங்கி ஊக்குவிப்பார். இது ஒட்டுமொத்த குழுவையும் சிறப்பாகச் செயல்பட வைத்தது. படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருந்தாலும், எங்களின் பயணம் ஒரு காதல் கதையைப் போல அழகாக இருந்தது," என்று பகிர்ந்துகொண்டார்.
கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் 43 வினாடி டீசர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டீசரில் ஒரு வசனம் கூட இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக மிஷ்கினின் பின்னணி இசை மற்றும் மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஓடும் ரெயிலுக்குள் ஆயுதம் ஏந்திய நபர்களிடமிருந்து பணயக் கைதிகளை மீட்கும் ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது என்பதை டீசர் உணர்த்துகிறது. விஜய் சேதுபதியுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன், நாசர், நரேன், சம்பத் ராஜ், கே.எஸ். ரவிகுமார், கலையரசன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார்.