சினிமா செய்திகள்

அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன் குரலில் 'முபாசா: தி லயன் கிங்' படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது

லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.முஃபாசா : தி லயன் கிங் படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை வைத்து இதுவரையில் 2 லயன் கிங் படங்கள் வந்துள்ளது. 1994 ஆம் ஆண்டில் ஒன்றும், 2019 ஆம் ஆண்டில் மற்றொன்றும் வெளியானது.

லயன் கிங் படத்திற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிம்பாவை தூக்கி அனைத்து காட்டு விலங்களுக்கும் காட்டும் காட்சி இன்னும் சமூகவலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுதான் உள்ளது.

இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முஃபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முஃபாசா : தி லயன் கிங் படம். இப்படத்தை ஆஸ்கர் விருதை வென்ற ஜெஃப் நதன்சன் எழுத பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அரச குடும்பத்தை சாராது, அனாதையாக வளர்ந்து தனக்கான ஆட்சியை உருவாக்கும் முஃபாசாவின் கதை மெய்சிலிர்க்க வைக்கிறது. முஃபாசா படத்தின் ஆங்கில ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன்பு வெளியான நிலையில் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர்கள் அர்ஜூன் தாஸ், அசோக் செல்வன், ரோபோ சங்கர், நாசர், விடிவி கணேஷ், சிங்கம் புலி ஆகியோரின் அட்டகாசமான குரலில் வெளியாகியுள்ள முஃபாசா படத்தின் தமிழ் ட்ரெய்லர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

முஃபாசா : தி லயன் கிங் படத்தின் தெலுங்கு ட்ரெய்லரில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு மகேஷ் பாபுவும் இந்தி ட்ரெய்லரில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு ஷாருக் காணும் குரல் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.